எச்.ராஜாவை கண்டித்து அறநிலையத்துறை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

சிவகங்கை, செப்.19:  இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், பணியாளர்களின் குடும்ப பெண்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து அறநிலையத்துறை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் எச்.ராஜா இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்களின் குடும்ப பெண்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்து பேசினார். இதை கண்டித்து சிவகங்கை முத்துச்சாமி நகரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக பணியாளர்கள் நேற்று பிற்பகல் ஒரு மணியுடன் அலுவலகத்தை பூட்டிவிட்டு பணி புறக்கணிப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் மேலாளர் லெட்சுமி மாலா, இணை ஆணையர் நேர்முக உதவியாளர் கணபதி, ஆய்வாளர் பிச்சுமணி, உதவியாளர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் உள்ள திருக்கோவில் பணியாளர்கள், சமஸ்தான அலுவலக பணியாளர்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அறநிலையத்துறை பணியாளர்களை அவதூறாக பேசி வரும் எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

காரைக்குடி, செப். 19: காரைக்குடி பெரியார் சிலை அருகே, பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தி.க, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ம.ம.க, தி.வி.க, பச்சைத் தமிழகம், தமுமுக, காரைக்குடி மக்கள் மன்றம் உள்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன.

Related Stories: