சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்ட கீழ்மாத்தூர் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் அவதி மின் தடையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செம்பனார்கோவில்,செப்.19: சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்ட கீழ்மாத்தூர் ஊராட்சியில் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்படுகிறார்கள். மேலும் மின் தடையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அடுத்து கீழ்மாத்தூர் ஊராட்சி பகுதிகளான கீழ்மாத்தூர், ஒட்டங்காடு, ஆணைமட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 16ம் தேதி இரவு சூறாவளி காற்றால் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆலமரம், அரசமரம், புளியமரம், தேக்கு உள்ளிட்ட 90 வருஷத்திற்கும் மேலான ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து வீடுகளிலும், சாலையிலும் விழுந்தது. மேலும் 240க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன.  உயர்மின் கம்பிகள், குறைந்த மின் அழுத்த கம்பிகள் அறுந்து வீட்டின் மேலும், சாலைகளிலும் கிடந்தது.  இதனால் அப்பகுதி இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்கு உள்ளானது.

இந்நிலைமையை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பூம்புகார் எம்.எல்.ஏ., பவுன்ராஜ், நாகை கலெக்டர் சுரேஷ்குமார் உள்ளிட்ட வருவாய்துறையினர் பாதிக்கப்பட்ட இடங்களை பார்ரவையிட்டு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர்.  மேலும் பொதுமக்களுக்கு போர்கால அடிப்படையில் இடர்பாடுகளை நீக்கி இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளப்படும் என்று கூறினர். கடந்த இரண்டு நாட்களாக எதுவும் செய்யமுடியாமல் தவித்த மக்கள் தற்பொழுது சகஜ நிலைக்கு திரும்புகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு தேவைப்படும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது.  மின்சாரம் தடைபட்டுள்ளதால், நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் தேக்க முடியாமல் தவித்தனர். இதற்காக சில இடங்களில் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் ஏற்றப்படுகிறது.  சில இடங்களில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் எடுத்து வந்து நீர் தேக்க தொட்டியில் சேமித்து பொதுமக்களுக்கு பயன்படும் வசதியாக செம்பனார்கோவில் ஒன்றிய வட்டார அலுவலர் தியாகராஜன் முன்னிலையில் செய்து வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறையாகவே உள்ளது  என்கின்றனர்.  சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்து வருகிறது.  ஆனால் தண்ணீர் எங்களுக்கு போதுமானதாக இல்லை என்கின்றனர். மேலும் இயல்பு வாழ்க்கை திரும்ப மின்சாரம் இன்றி தவிக்கின்றோம். உடனடியாக சீர்படுத்தி மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினர்.  

இது குறித்து தரங்கம்பாடி தாசில்தார் சுந்தரம் கூறுகையில்:பொதுமக்களுக்கு தேவையான அனைத்த உதவிகளையும் நாங்கள் வழங்கி கொண்டு இருக்கிறோம்.  முதலாவதாக பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாகுறையை நீக்கிக் கொண்டே வருகிறோம். பொதுமக்கள் சகஜ நிலைமைக்கு மாறி இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தீவிர முயற்சி எடுத்துள்ளோம் என்றார்.

Related Stories: