கீழக்கரை பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை பிரிக்க மக்களுக்கு பயிற்சி

கீழக்கரை, செப்.19:  கீழக்கரை நகராட்சி மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய சுகாதார விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடைபெற்றது. இதில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கீழக்கரையில் பிரதம மந்திரியின் ‘தூய்மையே உண்மையான சேவை’ என்ற திட்டத்தின் மூலமாக கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் தேசிய மாணவர்கள் படை, கப்பல் படை பிரிவு, தரைப்படை பிரிவு மாணவர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக பிரிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி செய்முறை விளக்கமும் அளித்தனர்.

இந்நிகழ்சிக்கு முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். என்சிசி பிரிவு நாகராஜன், கப்பல் படை பிரிவு கண்ணன் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பூபதி, தலைமை எழுத்தாளர் தமிழ் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் (பொ) தனலெட்சுமி பேரணியை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஊழியர்களுடன் மாணவர்கள் மூன்று பிரிவுகளாக பிரிந்து பேரணியாக சென்று ஒவ்வொரு பகுதியிலும் செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

Related Stories: