கிராமமக்கள் கண்டித்து மறியல்சாலையை தோண்டிபோட்ட அதிகாரிகள்

பேரையூர், செப்.19: சேடப்பட்டி அருகே நல்லா இருந்த சாலையை சீரமைப்பு செய்வதாக கூறி, தோண்டிப்போட்டதை கண்டித்து கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.சேடபட்டி அருகே உள்ளது டி.மீனாட்சிபுரம். இந்த ஊருக்கு செல்லும் சாலை கடந்த 3 மாதங்களுக்கு முன் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்தபணியும் நடக்கவில்லை. சாலை மோசமாக இருந்ததால் டி.மீனாட்சிபுரத்திற்கு உசிலம்பட்டியில் இருந்து எம்.கல்லுப்பட்டி செல்லக்கூடிய அரசுப்பேருந்தும், திருமங்கலத்தில் இருந்து டி.மீனாட்சிபுரம் வரக்கூடிய அரசுப்பேருந்தும் நிறுத்தப்பட்டது. 4 தனியார் பள்ளிப்பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.உடல்நிலை சரியில்லாதவர்கள் 108 ஆம்புலன்சை அழைத்தால் பஞ்சர் ஆகிவிடும் என்பதால் மெயின் சாலையிலேயே நிறுத்திக் கொள்கின்றனர். எனவே உடனடியாக சாலை சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என கிராமமக்கள், பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துவிட்டனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.இதனை கண்டித்து நேற்று கிராமமக்கள் சின்னக்கட்டளை-டி.ராமநாதபுரம் சாலை டி.மீனாட்சிபுரம் விலக்கில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து டி.கல்லுப்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் தலைமையிலான சேடபட்டி போலீசார், பேரையூர் துணை வட்டாட்சியர் வீரமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை பிரச்னையை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்கள் போராட்டம் காரணமாக ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.

Related Stories: