சிறை விதிகள் மீறலா? பார்ஸ்டல் பள்ளியில் நீதிபதி திடீர் ஆய்வு

மேலூர், செப்.19: மேலூரில் உள்ள உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் மன்றம் மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் நேற்று நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தனர்.

மேலூர் கிளைச் சிறைச்சாலை 18 வயது முதல் 21 வயதுள்ள இளம் குற்றவாளிகளை அடைக்கும் பார்ஸ்டல் பள்ளியாக 5 வருடத்திற்கு முன்பு மாற்றப்பட்டது. தென் மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர் என 6 மாவட்டத்து இளம் குற்றவாளிகள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 120 பேர் வரை இங்கு அடைக்க முடியும். மதுரை மத்திய சிறைச் சாலையின் கட்டுப்பாட்டில் இக்கிளை சிறை இயங்கி வருகிறது.நேற்று மதுரை மாவட்ட தலைமை நீதிபதி நஜிமாபானு, மாவட்ட குற்றவியல் நீதிபதி சத்தியமூர்த்தி பார்ஸ்டல் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுரேஷ், மேலூர் குற்றவியல் மாஜிஸ்திரேட் பழனிவேல் உடனிருந்தனர். தற்போது இப்பார்ஸ்டல் பள்ளியில் 30 குற்றவாளிகள் மட்டுமே உள்ளனர்.இங்குள்ள குறைபாடுகள், சீர்திருத்தம் செய்ய வேண்டியவை, சிறை விதிகளுக்கு புறம்பாக ஏதேனும் பொருட்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குற்றவாளிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தனர். இதேபோல் குற்றவியல் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவற்றிலும் ஆய்வை மேற்கொண்டனர்.

Related Stories: