1,662 வாக்காளர்கள் திடீர் நீக்கம் : திருப்பரங்குன்றம் தொகுதியில் தில்லுமுல்லு?

மதுரை, செப்.19: இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் திடீரென 1,662 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்குபின் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட பிறகும், எண்ணிக்கை குறைந்துள்ளது அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ போஸ் மரணமடைந்ததால் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பரில் இடைத்தேர்தல் நடக்குமா அல்லது 2019 பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடக்குமா என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனாலும் நவம்பரில் இடைத்தேர்தல் நடைபெற்றால் எதிர்கொள்ள முக்கிய அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வியடைந்த ஆளுங்கட்சியான அதிமுக, இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என முழுமூச்சாக இறங்கியுள்ளது. இந்த சூழலில் இந்த தொகுதி வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சியினரிடையே குழப்பத்தை உருவாக்கி உள்ளது.2016 மே மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்து 96 ஆக இருந்தது. இதே தொகுதியில் 2016 நவம்பர் 22ல் நடந்த இடைத்தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 85 ஆயிரத்து 980 என அறிவிக்கப்பட்டது. பொதுத்தேர்தலுக்கு பிறகு 6 மாதத்திற்குள் நடைபெற்ற இடைத் தேர்தலில் திடீரென 6 ஆயிரத்து 884 வாக்காளர்கள் அதிகரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த தொகுதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இடைத்தேர்தல் வருகிறது. கடந்த 1ம் தேதி இதற்கான புதிய வாக்காளர் பட்டியலை மதுரை கலெக்டர் வெளியிட்டார். இதில் மொத்த வாக்காளர்களாக 2 லட்சத்து 84 ஆயிரத்து 318 பேர் உள்ளனர்.  அதாவது 2 ஆண்டுக்கு முந்தைய இடைத்தேர்தலை விட தற்போது 1,662 வாக்காளர்கள் குறைந்துள்ளனர். இவர்கள் திடீரென்று பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 2 ஆண்டு இடைவெளியில் 18 வயது பூர்த்தியானவர்கள் புதிதாக சேர்க்கப்பட்ட பிறகும், வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது அரசியல் கட்சியினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.அரசியல் கட்சியினர் கூறும்போது, “வாக்காளர் பட்டியலில் 2 ஆண்டு இடைவெளியில் இறந்தவர்கள் பெயர் நீக்கப்படுவது உண்டு. இதை விட புதிய வாக்காளர் சேர்க்கை தான் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் வாக்காளர் எண்ணிகை 2 ஆண்டில் குறைந்துள்ளது. இந்த பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது எப்படி என்பது மர்மமாக உள்ளது” என்றனர்.

Related Stories: