சோழவந்தான் ரயில் நிலையத்தில் நீண்டநாள் சர்வர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி

சோழவந்தான், செப்.19: சோழவந்தான் ரயில் நிலையத்தில் சர்வர் பழுதால் நீடித்து வந்த தட்கல், முன்பதிவு பிரச்சனை தினகரன் செய்தி எதிரொலியாக சீராகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கியமான ரயில் நிலையங்களில் சோழவந்தான் ரயில் நிலையமும் ஒன்று. தென் பகுதியில் இருந்தும், வட பகுதியில் இருந்தும் தினமும் 60க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் சென்று வருகின்றன. சுற்றுப் பகுதியில் உள்ள 50க்கும்  மேற்பட்ட கிராமமக்கள் ரயில் பயணத்திற்கு தட்கல் மற்றும் முன்பதிவு செய்ய இந்த ரயில் நிலையத்திற்குதான் வருகின்றனர். தமிழக அளவில் அதிக வருவாய் தரும் முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையமான இங்கு, ஒரு மாதத்திற்கு மேலாக சர்வரில் பழுதால் தட்கல் மற்றும் முன்பு பதிவு பயணச்சீட்டுகளை பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. தட்கல் டிக்கெட் பதிவுக்காக அதிகாலை முதல் டோக்கன் வாங்கி வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து விண்ணப்பத்தை கொடுத்தால், சர்வர் பழுதால் தாமதமாகி ஆன்லைனில் டிக்கெட் தீர்ந்து விடும். இதனால் வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்தும் டிக்கெட் கிடைக்காமல் பயணிகள்  ஏமாற்றமடைந்தனர். விரக்தியில் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்யும் நிலை தினமும் தொடர்ந்தது. இது குறித்து ‘தினகரன்’ நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இணையதள பழுது நீக்கும் ரயில்வே துறை மென் பொறியாளர்கள் சோழவந்தான் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.  இணையதள பழுதை சரி செய்தனர். இதனால் முன்பு இருந்தது போலவே விரவான இணையதள சேவை கிடைக்க தொடங்கியுள்ளது. தட்கல் மற்றும் முன்பதிவு செய்யும் பயணிகள் தாமதமின்றி டிக்கெட் பெற்று செல்கின்றனர். நீண்ட நாட்களாக பயணிகளுக்கும் ரயில் நிலைய ஊழியர்களுக்கும் இருந்த டிக்கெட் முன் பதிவு பிரச்சனை முடிவுக்கு வந்தது.

Related Stories: