ராசிபுரத்தில் இருந்து திருப்பதி தீர்த்தவாரி விழாவுக்கு 6 டன் பூமாலை

ராசிபுரம், செப்.19: திருப்பதி திருமலை தீர்த்தவாரி விழாவிற்கு, ராசிபுரத்தில் இருந்து 6டன் பூக்கள் மாலையாக தொடுத்து அனுப்பப்பட்டது. திருப்பதியில் பிரமோற்சவ விழாவுக்கு, சேலம் அடுத்த கொங்கணாபுரம்  திருமலை திருப்பதி மன் நாராயணா நித்யபுஷ்ப கைங்கர்ய சபா சார்பில், ஆண்டுதோறும் பூக்களை அனுப்பி வருகின்றனர். இந்த ஆண்டு திருப்பதியில் பிரமோற்சவ விழா, கடந்த வாரம் தொடங்கியது. இதையடுத்து முதற்கட்டமாக 8 டன் பூக்கள் மாலையாக தொடுக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (19ம் தேதி) தொடங்கும் தீர்த்தவாரி விழாவுக்காக ராசிபுரம், சிங்களாந்தபுரத்தில் இருந்து  சாமந்தி, ரோஜா, மல்லிகை, துளசி, அரளி, மரிக்கொழுந்து, தாமரை, சம்பங்கி உள்ளிட்ட 6 டன் பூக்களை மாலையாக தொடுக்கும் பணி நேற்று நடந்தது. ராசிபுரம் தனியார் பள்ளி வளாகத்திலும், சிங்களாந்தபுரம் தனியார் மில் வளாகத்திலும் பூக்களை தொடுக்கும் பணி நடந்தது. ஆத்தூர், வாழப்பாடி, சேலம், நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் பூக்களை மாலையாக தொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து, பூ வாங்கிவரப்பட்டது. இத்துடன், கரும்பு, தென்னம்பாளை, தென்னங்குருத்து, பாக்கு குலைகள், இளநீர் குலைகள், கூந்தப்பனை, மாங்கொத்துகளும் சேர்த்து நேற்று இரவு லாரி மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: