லாரி உரிமையாளர்கள் சங்க ஆயில் கடையில் கம்ப்யூட்டர், கேமரா திருட்டு

நாமக்கல், செப். 19:  நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு சொந்தமாக 3 பெட்ரோல் பங்க், 5 ஆயில் கடைகள், 2 ஆட்டோ மொபைல்ஸ் பிரிவு போன்றவை உள்ளன. இந்த அனைத்து அலுவலகமும் இன்ட்ராநெட் என்ற நவீன தொழில்நுட்ப மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த  கடைகளில் நடைபெறும் வியாபாரத்தை சங்க நிர்வாகிகள், மேலாளர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஆன்லைன் மூலம் கண்காணிக்க முடியும். விற்பனை தொடர்பான அனைத்து தகவலும், சேலம் ரோட்டில் உள்ள லாரி சங்க தலைமை அலுவலகத்தில் உள்ள மெயின் சர்வரில் பதிவாகும்.

வாடிக்கையாளருக்கு எதாவது பில் மாற்றி தரவேண்டும் என்றாலும், அது தலைமை அலுவலகம் அனுமதி அளித்தால் தான் முடியும். இந்நிலையில், நாமக்கல் பரமத்தி ரோட்டில் செயல்பட்டு வந்த சங்கத்துக்கு சொந்தமான ஆயில் கடையின் பூட்டை நேற்று முன்தினம் இரவு மர்மஆசாமிகள் உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கிருந்த கம்ப்யூட்டர் மற்றும் இன்ட்ராநெட்டுடன் இணைத்திருந்த கேமரா ஆகியவற்றை உடைத்து எடுத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் வாங்கிலி, நேற்று நாமக்கல் போலீசில் புகார் அளித்தார். டிஎஸ்பி ராஜேந்திரன் நேரில் வந்து ஆயில் கடையில் விசாரணை நடத்தினார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: