வடகிழக்கு பருவமழைக்கு முன் மாவட்டத்தில் நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

நாமக்கல்,  செப். 19:வடகிழக்கு பருவமழைக்கு முன்னேற்பாடாக, நாமக்கல் மாவட்டத்தில்  நீர்நிலைகளை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு  கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தில்,  வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த  ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து கலெக்டர்  ஆசியாமரியம் பேசியதாவது: பொதுப்பணித்துறையினர் மற்றும் ஊரக  வளர்ச்சித்துறையினர் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல கூடிய வாய்க்கால்கள்  மற்றும் ஏரி குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி, தடையாக உள்ள  ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் பழுது இருந்தால், அதை சரிசெய்ய வேண்டும்.மணல்  மூட்டைகள், சவுக்கு கட்டைகள் சேகரித்து இருப்பு வைக்க வேண்டும். உணவு  வழங்கல் துறை அலுவலர்கள், மழைக்காலங்களில் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ள  பகுதிகளில் ரேஷன் பொருட்களை பாதுகாத்து வைக்க வேண்டும். காதாரத்துறையினர்  மழைக்காலங்களில் அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை தயார் நிலையில்  வைத்திருக்க வேண்டும்.  வருவாய்துறையினர்  நிவாரண முகாம்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூடுதல்  தேவைக்காக தற்காலிகமான இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.

வடகிழக்கு பருவமழை  காலங்களில் தாசில்தார்கள் மழை அளவு மற்றும் இதர சேதங்கள் குறித்த அறிக்கையை  தினமும் காலை 7 மணிக்குள் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, கலெக்டர்  அலுவலக கட்டுபாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். மின்வாரிய அலுவலர்கள் பருவமழைக் காலத்தில் 24 மணி  நேரமும் பணியாற்றும் வகையில் தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு அவர்  தெரிவித்தார்.கூட்டத்தில் டிஆர்ஓ பழனிச்சாமி, கலெக்டரின் நேர்முக  உதவியாளர் பால்பிரின்ஸி ராஜ்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகரிகள் கலந்து  கொண்டனர்.

Related Stories: