அஞ்செட்டி மலைப்பாதையை சீரமைக்கும் பணி மும்முரம் தேன்கனிக்கோட்டை

செப்.19: தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி மலைப்பாதையில் முட்புதர்களை அகற்றி சீரமைக்கும் பணியை சாலை பணியாளர்கள் முடுக்கி விட்டுள்ளனர்.

தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி மலைப்பாதை அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் கொண்டதாகும். இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. முதல்முறையாக இந்த சாலையில் வாகனங்களை இயக்குவோர் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. மேலும், சாலையோரம் செடி, கொடிகள் புதர் போல் மண்டி கிடப்பதால் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரிவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயத்த ஆடை நிறுவனத்தில் இருந்து மாலை வேளையில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு திரும்பும் வழியில் அஞ்செட்டி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்தனர். எனவே, மலைப்பாதையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்பேரில், தேன்கனிக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட செயற்பொறியாளர் நந்தகுமார் மேற்பார்வையில் அஞ்செட்டி மலைப்பாதையில் சீரமைப்பு பணி முடுக்கி விடப்பட்டது. அதன்படி, சாலைப்பணியாளர்கள் ஒன்று சேர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் மண்டிக்கிடந்த முள்செடிகள் மற்றும் புதர்களை அப்புறப்படுத்தினர். விபத்துக்களை குறைக்கும் வகையில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: