மாவட்டம் முழுவதும் கால்நடை மருத்துவ முகாம் : 18 ஆயிரம் ஆடு, மாடு, கன்றுகளுக்கு சிகிச்சை

கிருஷ்ணகிரி, செப்.19: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கால்நடை பாதுகாப்பு மருத்துவ முகாம்களில் 18 ஆயிரம் ஆடு, மாடு, கன்றுகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாக கலெக்டர் பிரபாகர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரம் கிராமத்தில் 33வது கால்நடை பாதுகாப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் டாக்டர். பிரபாகர்  தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் இளங்கோ, துணை இயக்குநர் மருத்துவர் மோகன்ராஜ், உதவி இயக்குநர் மருத்துவர் மரியம்சுந்தர் முன்னிலை வகித்தனர்.முகாமில் கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் இம்மாதம் 1ம் தேதி முதல் 21ம் தேதி வரை  கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி வழங்கும் முகாம் நடைபெறுகிறது. இதேபோல், மாவட்டத்தில் இதுநாள் வரை நடந்த 32 கால்நடை பாதுகாப்பு மருத்துவ முகாமில், 18 ஆயிரம் ஆடு, மாடு, கன்றுகள் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. கன்றுகள் பேரணி நடத்தியதில் சிறந்த கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இம்முகாமில், தடுப்பூசி சிகிச்சை, கன்று பேரணி, மலட்டு நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், ஸ்கேன் செய்தல், மற்றும் சினை பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. கிராமபுறங்களில் நடைபெறும் இந்த கால்நடை மருத்துவ முகாம்களை பயன்படுத்திக்கொண்டு தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்துக்கொள்ள வேண்டும். இதேபோல், கோமாரிநோய் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது என்றார்.

Related Stories: