ஊத்தங்கரையில் நாய் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி

ஊத்தங்கரை, செப்.19: ஊத்தங்கரையை அடுத்த கெரிகேப்பள்ளியில் ஊத்தங்கரை-தர்மபுரி பிரதான சாலையும், கல்லாவி மற்றும் சாமல்பட்டி இணைப்பு சாலையும் என நான்கு ரோடு சந்திப்பு உள்ளது. ரயில்வே தரைப்பாலம் பகுதியில் கடந்து இரண்டு பிரிவு ரோட்டிற்கு செல்ல ஏராளமானோர் இரண்டு சக்கர வாகனங்களில் பயணிக்கிறார்கள். ஆனால், பிரதான சாலையின மையப்பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சாலையின் குறுக்கும், நெடுக்குமாறு சுற்றித்திரியும் நாய்களால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. வாகனங்களுக்கு போட்டியாக நடுரோட்டிற்கு வரும் நாய்கள், அந்த வழியாக செல்வோரை விரட்டி சென்று பதம் பார்த்து வருகின்றன. வாகனங்களில் செல்வோரை பின்னாலேயே துரத்தி பதம் பார்க்கின்றன. இதனால், நாய்களை கண்டாலே வாகன ஓட்டிகள் கீழே இறங்கி நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. அப்படியும் நாய்கள் விடுவதில்லை. அவர்களை சுற்றி சுற்றி மோப்பம் பிடித்தவாறு வந்து, திடீரென லபக் என கடித்து குதறுவதுமாக உள்ளது.

இந்த நாய்களின் அட்டகாசத்தால் அந்த பக்கமாக குழந்தைகளை அழைத்துச்செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகள் என்றும் பாராமல் நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கின்றன. எனபே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அட்டகாசம் செய்து வரும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: