ஒகேனக்கல்லில் நீர்மின் திட்டம் செயல்படுத்தினால் தினசரி 1,200 மெகாவாட் மின் உற்பத்திக்கு வாய்ப்பு

தர்மபுரி, செப்.19: ஒகேனக்கல் அருவி பகுதியில் நீர்மின் திட்டம் செயல்படுத்தினால், 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புள்ளதாக இயற்கை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் புகழ்பெற்ற சுற்றுலாதலங்களில் ஒன்றாக கருதப்படுவது ஒகேனக்கல். இங்குள்ள நீர்வீழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர். கோடைக்காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகப்படியாக இருக்கும். மேட்டூர் அணைப்பகுதியில் நீர்மின் திட்டம் செயல்படுத்துவதுபோல், ஒகேனக்கல் அருவி பகுதிகளிலும் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மக்களுக்கான மின் தேவை முழுமையாக பூர்த்தியடையும். மின் பற்றாக்குறை உருவாகி வரும் சூழ்நிலையில், நீர்மின்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பிடத்திலும் உள்ளது.

 இயற்கை ஆர்வலரும், தமிழறிஞருமான தகடூர் வனப்பிரியன் கூறியதாவது; ஒகேனக்கல் அருவியில் இருந்து கொட்டும் நீரில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் எளிதாக செயல்படுத்தலாம். இந்த நீர்மின்திட்டத்தின் மூலம் தினசரி 1,200 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டமாக அமையும். ஒகேனக்கல் அருவி பரந்து, விரிந்து இருப்பதாலும், ஓடும் நீரிலேயே மின்சாரம் தயாரிக்கும் திட்டம் இருப்பதாலும், 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது சாத்தியமே. மேலும் அனல் மின்நிலையம், அணுமின்நிலையம், காற்றாலை மின்திட்டம் போன்ற திட்டங்களைவிட நீர்மின் உற்பத்தி திட்டத்தில் மின் உற்பத்திக்கான செலவு குறைவாகும். இந்த திட்டத்திற்காக கர்நாடகா அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் இல்லை. வரும் நீரிலேயே தயாரிக்கலாம். மின்சாரம் பற்றாக்குறை உள்ள நிலையில் தற்போது, தர்மபுரி மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்திற்கும், அன்டை மாநிலமான கர்நாடகவிற்கும் மின்சாரம் பகிர்ந்து கொள்ளலாம். தமிழக அரசு, மின்வாரிய அதிகாரிகள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: