இண்டூரை தலைமையிடமாக கொண்டு தனி ஒன்றியம் உருவாக்க கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தர்மபுரி, செப்.19: நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து, இண்டூரை தலைமை இடமாக கொண்டு தனி ஒன்றியத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரக்குழு கூட்டம், நிர்வாகக்குழு உறுப்பினர் ரத்தினவேல் தலைமையில் இண்டூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் தேவராசன், மாவட்ட பொருளாளர் சின்னசாமி, மாநிலக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், வட்டார செயலாளர் குட்டி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் வட்டார நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முனுசாமி,சரவணன், ராஜகோபால், வட்டாரக்குழு உறுப்பினர்கள் சின்னராஜ், மாது, பழனிசாமி, கிருஷ்ணன், சுப்ரமணி, மாதப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து இண்டூரை தலைமை இடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியத்தை ஏற்படுத்த வேண்டும். இண்டூர் பகுதிவிவசாயிகள் பயன்பெறும் வகையில் சின்னாறு அணை நீரை பாலவாடி, தளவாய்அள்ளி ஏரி வழியாக இண்டூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இண்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொலைதூரத்தில் இருந்து வந்து பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தங்கி படிக்கும் வகையில் விடுதி கட்ட இடம் வழங்க வேண்டும். இண்டூர், பண்டஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்தா பிரிவு தொடங்கி கூடுதல் மருத்துவர் மற்றும் செவிலியர்களை நிரப்ப வேண்டும். பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள தளவாய்அள்ளி ஏரியில் குடிமராமத்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: