வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கலெக்டர் தலைமையில் ஆலோசனை

தர்மபுரி, செப்.19: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. தமிழக பேரிடர் மேலாண்மை முகமை சார்பில், வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடு மற்றும் தீ தடுப்பு ஒத்திகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தீயணைப்பு துறையினர் தீ பிடித்தால் அதை சாக்கு போர்த்தி அணைக்கும் முறை, பயர் எக்ஸ்டிங்கியூசர் மருந்தை தெளித்து அணைக்கும் முறை குறித்தும், மின்சாதனங்களில் ஏற்படும் தீயை அணைக்கும் முறை குறித்தும் செயல் விளக்கம் காண்பித்தனர். மேலும் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் உருவாகும் திடீர் நீர்ப்பகுதியின் அருகே செல்லக்கூடாது. நீர் நிரம்பிய ஏரி குளங்கள் அருகே குழந்தைகளை விளையாட அனுமதிக்க கூடாது என பல்வேறு எச்சரிக்கை விழிப்புணர்வு பற்றி விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் மலர்விழி தலைமை வகித்து பேசியதாவது; மாவட்டத்தில் வடகிழக்கு  பருவமழை தீவிரமடையும் என்பதால், நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு குறித்து  உடனடியாக  மாவட்ட நிர்வாகத்திற்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து ஏரி, குளங்கள் மற்றும் குட்டைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஒன்றிய அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வெள்ளம் பற்றிய விழிப்புணர்வு பலகை அமைத்திட வேண்டும். பருவமழை தொடங்கும் முன்பாகவே அனைத்து நீர்நிலைகள், பாசன கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாக கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளம் உண்டாவதை தவிர்க்கும் பொருட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தேசிய, மாநில நெடுஞ்சாலை, இருப்பு பாதைகள் மற்றும் இதர  முக்கிய சாலைகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அருகாமையில்  உள்ள நீர்நிலைகள், கால்வாய்களை ஆழப்படுத்த வேண்டும். சாலைகளில் உள்ள குழிகளை சரிசெய்யவேண்டும்.நீர்த்தேக்கங்கள், அணைகளின் கீழ்நிலை நீரோட்ட  பகுதிகளை ஆய்வு செய்து  அதிகப்படியாக வெளியேறும் நீர் இடையூறுகள் இல்லாமல் செல்வதை உறுதி செய்ய வேண்டும். சூறாவளி காற்றினால் சாலையோரங்களில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் கீழே விழ நேர்ந்தால், அவற்றை உடனுக்குடன் அகற்றிட தேவையான இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெள்ள பாதிப்பு ஏற்படும் கிராமங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்க தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.  குளோரின் கலந்த குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள தேவைப்படும் போதுமான மருந்துகளும் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் இயற்கை இடர்பாடுகள் மற்றும் வெள்ளச்சேதங்கள் குறித்து 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Related Stories: