தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவு துவங்க அனுமதி

தர்மபுரி, செப்.19:  தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில், ஆண்டுதோறும் 100 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்கின்றனர். இதுவரை 500 பேர் வரை எம்பிபிஎஸ் பட்டம் பெற்றுள்ளனர். இந்நிலையில் வரும் கல்வியாண்டு முதல் எம்எஸ் பொது அறுவை சிகிச்சை மருத்துவ பட்டமேற்படிப்பு தொடங்க இக்கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில், எம்எஸ் பொது அறுவைசிகிச்சை பாடப்பிரிவு தொடங்க, மருத்துவ கவுன்சில் மதிப்பீட்டு குழு அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையை பரிசீலித்த பட்டமேற்படிப்பு மருத்துவ கல்வி கமிட்டி, 2019-2020ம் கல்வியாண்டு முதல், 8 மாணவர்களுடன், பொது அறுவைசிகிச்சை பாடப்பிரிவு தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. வரும் கல்வியாண்டில் இந்த படிப்பு தொடங்கப்பட வாய்ப்புள்ளது. இதுவரை எம்பிபிஎஸ் 500 பேர் முடித்துள்ளனர். நடப்பாண்டில் எம்எஸ் ஆப்தல்மாலஜி (கண்) பிரிவில் 2 பேரும், எம்டி பீடியாட்ரிக் (குழந்தைகள் நலம்) பிரிவில் 4 பேருமாக முதுகலை பட்டத்தை படித்து வருகிறார்கள், என்றனர்.

Related Stories: