அனுமந்தபுரத்தில் பயன்பாடின்றி சேதமடைந்து கிடக்கும் சந்தை

காரிமங்கலம், செப்.19: காரிமங்கலம் அருகே அனுமந்தபுரத்தில் பயன்பாடின்றி சேதமடைந்து கிடக்கும் சந்தை கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அனுமந்தபுரம் ஊராட்சிக்குட்பட்டு 30க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் காய்கறி வாங்கவும், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, பாலக்கோடு உள்ளிட்ட பிற ஊர்களுக்கு செல்லவும் அனுமந்தபுரம் வந்து சென்று வருகின்றனர். இதையொட்டி அனுமந்தபுரம் கிராமம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்நிலையில் அனுமந்தபுரத்தில் கடந்த 2011ம் ஆண்டு ஊரக வளர்ச்சி முகமை சார்பில் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்கள் விற்பனை செய்வதற்கு வசதியாக ஊரக சந்தை ஏற்படுத்தும் வகையில் 10க்கும் மேற்பட்ட கடைகளுடன் கூடிய கட்டடம் ₹15 லட்சத்தில் கட்டப்பட்டது. இந்த கட்டடம் திறப்பு விழா நடந்தும் இதுவரை அவற்றை பயன்படுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இங்கு எந்த வியாபாரியும் கடை நடத்தவும் முன்வரவில்லை. இதனால் சந்தை கட்டடம் பயன்பாடின்றி சேதம் அடைந்து வருகிறது. மேலும் இங்கு மாலை நேரத்தில் சமூக விரோத கும்பல் மது அருந்தும் பாராகவும் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களும் நடக்கிறது. இப்பகுதியில் வசிக்கும் பலர் கடைகளை வீடு போல் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இச்சந்தை கட்டடத்தை பயன் உள்ள வகையில் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: