செங்கோட்டை கலவரம் முஸ்லிம் வீடுகளில் தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும்

நெல்லை, செப். 19: செங்கோட்டை கலவரம் தொடர்பாக முஸ்லிம்களின் வீடுகளில் நடத்தப்படும் தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும் என கலெக்டரிடம் தமுமுகவினர் மனு அளித்தனர்.   இதுகுறித்து தமுமுக நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் நயினார் முகம்மது, கிழக்கு மாவட்ட தலைவர் ரசூல்மைதீன்,  செயலாளர் அலிப் பிலால், பொருளாளர் சுல்தான் வக்கீல் அணி செயலாளர் அல்பி நிஜாம், தென்காசி நகரத் தலைவர் அகமது ஷா, மேற்கு மாவட்ட தமுமுக செயலாளர் ஆரிப், மமக மாவட்டச் செயலாளர் கொலம்பஸ் மீரான் ஆகியோர் கலெக்டர் ஷில்பாவிடம் அளித்துள்ள மனு விவரம்:

செங்கோட்டை மேலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது நடந்த கலவரத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆபாசமான வார்த்தைகளை பேசியதோடு முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மீது கற்கள் வீசியும், இரும்பு கம்பியால் தாக்கியும் சேதப்படுத்தினர். தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்து தென்காசி, நெல்லை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும்  முஸ்லிம்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளதால் இஸ்லாமிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 இக்கலவரத்திற்கு சம்பந்தமில்லாத தமுமுக மேற்கு மாவட்டச் செயலாளர் முகமது ஆரிப், தொண்டர் அணி துணைச் செயலாளர் உமர், செங்கோட்டை நகர துணைத்தலைவர் முகமது இஸ்மாயில், முன்னாள் நகர தலைவர் உமர்கத்தார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளது கண்டிக்கத்தக்கது.

இந்த கலவரத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மீதும் மோதலை தூண்டிவிட்ட பாஜவினர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். முஸ்லிம் வீடுகளில் போலீசார் தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: