ஆசனூர் கிராமத்தில் செயல்படாமல் பூட்டிக்கிடக்கும் காவல் உதவி மையம்

உளுந்தூர்பேட்டை, செப். 19: உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் நடைபெற்று வரும் விபத்துகளை தடுக்கவும், விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் அதிக அளவிலான விபத்துகள் நடைபெறும் இடத்தில் காவல் உதவி மையம் திறக்க விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்  உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் உளுந்தூர்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசூர் மற்றும் ஆசனூர் பகுதியில் காவல் உதவி மையம் திறக்கப்பட்டது. தினந்தோறும் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் எடைக்கல் காவல்நிலைய போலீசார் பணியில் இருந்து விபத்துகள் மற்றும் போக்குவரத்து மீறும் வாகனங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக இந்த காவல் உதவி மையம் திறக்கப்பட்டது. ஆனால் எடைக்கல் காவல்நிலையம் தற்போது புதிய கட்டிடத்தில் ஆசனூர் கிராமத்தில் திறக்கப்பட்டதால் இந்த காவல் உதவி மையம் கடந்த சில மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் இந்த மையம் போதிய பராமரிப்பு இன்றி பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் புகலிடமாக மாறி உள்ளது.

தற்போது இந்த காவல் உதவி மையம் வைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகில் விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிறிய மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. எனவே ஆசனூர் கிராமத்தில் திறக்கப்பட்ட காவல் உதவி மையத்தினை தற்போது அதிக விபத்துகள் நடைபெற்று வரும் புல்லூர் குறுக்குரோடு பகுதியில் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த பகுதியில் எந்த மேம்பாலமும் இல்லாததால் சாலையின் குறுக்கே செல்லும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று அடிக்கடி மோதிக்கொண்டு விபத்துகள் ஏற்பட்டு ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தும், உயிரிழந்தும் வருகின்றனர். மேலும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தினை இணைக்கும் முக்கிய சந்திப்பாக இந்த புல்லூர் குறுக்குரோடு உள்ளதால் மதுபானம், மணல் கடத்தல் சம்பவங்கள் அதிக அளவு நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து ஆசனூர் கிராமத்தில் உள்ள காவல் உதவி மையத்தினை அகற்றிவிட்டு அதனை புல்லூர் குறுக்குரோடு பகுதியில் திறக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: