செஞ்சி அருகே செவலபுரையில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஊழல்

விழுப்புரம், செப். 19: தேசிய ஊரக வேலை திட்டத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகளை செய்து ஊழல் பணி செய்ததாக விழுப்புரம் ஆட்சியரிடம் கிராமமக்கள் புகார் மனு அளித்துள்ளனர். ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து, மீண்டும் வேலைவாய்ப்பு அளித்து வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் விழுப்புரம் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி ஏதும் வழங்கவில்லை. மழையும் இல்லாத காரணத்தால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. நாங்கள் பிைழக்க வழியில்லாமல் பசியும், பட்டினியுமாக வாழ்ந்து வருகிறோம்.

மேலும், பொக்லைன் இயந்திரத்தின் மூலம் வரப்பு மடித்தல், பண்ணை குட்டை அமைத்தல், மாட்டு பண்ணை அமைத்தல் என்று தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் எங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல் பணியை முடித்து எங்கள் பணத்தை அபகரிக்கின்றனர். எங்களுடைய தேசிய ஊரக வேலை அட்டையில் வேலை செய்வதாக எங்கள் கையொப்பத்தை அவர்களே போட்டுக்கொண்டு வங்கிக்கணக்கில் பணம் வந்தவுடன் எங்களை மிரட்டி பணத்தை பறித்துக்கொள்கின்றனர்.

நாங்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் ஏதாவது காரணம் கூறி எங்களை மிரட்டுகிறார்கள். எங்கள் ஊரில் பல குடும்பங்கள், நிலமில்லாமல் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி பெரிதும் அல்லல்பட்டு வருகிறோம். மேலும் கிராம சபை கூட்டத்தில் எந்தவொரு தகவலையும் அறிவிக்காமல் அவர்களே தீர்மானத்தை எழுதி படிப்பறிவில்லாத மக்களிடம் கையொப்பம் பெற்றுக்கொள்கின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே புகார் மனு அளித்துள்ளோம். இதுநாள் வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2015-16ம் ஆண்டு நடந்த தணிக்கை அறிக்கையில் பல்வேறு ஊழல்கள் நடந்ததாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்தில் மீண்டும் வேலைவாய்ப்பு அளித்து வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: