நூதன முறையில் கடத்தல் ₹5 லட்சம் மதுபாட்டில், வேன் அதிரடி பறிமுதல்

விழுப்புரம், செப். 19: புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு வேனில் நூதன முறையில் மதுபாட்டில் கடத்தி சென்றபோது போலீசார் சோதனையில் சிக்கியது. விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், விக்கிரவாண்டி அருகே ஒரத்தூர் சாலையில் திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து அதிவேகமாக ஒரு வேன் வந்துகொண்டிருந்தது. போலீசாரை கண்டதும் அந்த வேன் நிற்காமல் சென்றுள்ளது. பின்னர் போலீசார் துரத்திச்சென்ற நிலையில், வேனை ஓட்டி வந்தவர் திடீரென சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதை தொடர்ந்து வேனை போலீசார் சோதனையிட்டனர். அதில், வேனில் நூதன முறையில் சீட் மற்றும் மரப்பலகைக்கு அடியே அட்டைப் பெட்டியில் மறைத்து வைத்து மதுபாட்டில் கடத்திவந்தது தெரியவந்தது.

46 அட்டை பெட்டிகளில் 2,208 மதுபாட்டில்களும், 35 லிட்டர் எரிசாரயமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் வேன், மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு கொண்டுவந்தனர். தொடர்ந்து வேனின் உரிமையாளர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு திருவண்ணாமலைக்கு இதனை கடத்திச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில், வேனின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: