அகஸ்தியர் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட கட்டணம் ரத்து

வி.கே.புரம், செப். 19:  பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க இன்று முதல் அமல்படுத்தப்படவிருந்த ரூ.10 கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அம்பை, முண்டந்துறை, பாபநாசம், கடையம் உள்ளிட்ட 4 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, கரடி, யானை, மான், மிளா உள்ளிட்ட ஏராளமான மிருகங்கள் வசித்து வருகின்றன. தேக்கு, சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும் உள்ளன. அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் உள்ளதால் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பாபநாசம் வன சோதனை சாவடி, முண்டந்துறை வன சோதனை சாவடிகள் மூலம் சுற்றுலா பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.

முண்டந்துறை சோதனை சாவடி வழியாக வனப்பகுதிக்குள் செல்வோருக்கு ஒரு நபருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் பாபநாசம் வன சோதனை சாவடி வழியாக செல்வோருக்கு இன்று (19ம் தேதி) முதல் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். இதனால் அகஸ்தியர் அருவிக்கு குளிக்க செல்பவர்கள் ரூ.10 கட்டணம் செலுத்தித்தான் குளிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து அம்பை தொகுதி எம்எல்ஏ முருகையா பாண்டியன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கவனத்திற்கு கொண்டு சென்று ரூ.10 கட்டணத்தை ரத்து செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதையேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் பார்கவ தேஜாவை தொடர்பு கொண்டு, அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு இன்று முதல் விதிக்கப்படவிருந்த ரூ.10 கட்டணத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார். அதன்படி அகஸ்தியர் அருவியில் குளிக்க செல்வதற்கான கட்டணத்தை ரத்து செய்யும் உத்தரவை முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் பார்கவ தேஜா பிறப்பித்தார். இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

21ம் தேதி அமைச்சர் ஆய்வு

வருகிற 21ம் தேதி முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பாபநாசம் அகஸ்தியர் அருவி, முண்டந்துறை பகுதி, சேர்வலாறு, பாபநாசம் அணை, சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு உட்பட்ட வனப்பகுதி உள்ளிட்ட இடங்களை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்கிறார் என்று முருகையாபாண்டியன் எம்எல்ஏ தெரிவித்தார்.

Related Stories: