பருவமழை முன்னேற்பாடு குறித்து மாநகராட்சி ஆணையர் ஆலோசனை: 15 நாட்களில் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நற்று நடந்தது. சென்னை மாநகராட்சி ஆணையர்  கார்த்திகேயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன், பல்வேறு மாநகராட்சி அதிகாரிகள், மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பேரிடர் மேலாண்மை, கப்பற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், காவல்துறை, இந்திய வானிலை ஆய்வு மையம், வானொலி, இந்து அறநிலையத் துறை, வேளாண்மைத்துறை, தீயணைப்புத்துறை, போக்குவரத்துத் துறை, ஆவின், குடிசை மாற்று வாரியம், மீன்வளத்துறை, வனத்துறை, சுகாதாரத்துறை, தெற்கு ரயில்வே, பி.எஸ்.என்.எல், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு  உயர் அதிகாரிகளும்  கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம்  ஆணையர் கார்த்திகேயன் கூறியதாவது: ‘‘மழை நீர் வடிகால்களை துர்வாரும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இன்னும் 15 நாட்களில் இந்த பணிகள் முடிவடையும். 2015ம் ஆண்டு பெரு வெள்ளத்தின் போது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வடிகால்கள் எல்லாம் சேதமடைந்தன.   அவைகள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழக அரசு 290 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஒரு சில பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கினாலும் பாதிப்பு ஏற்படாது’’ என்றார். வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,  ‘‘தற்போது எந்தவித பெரு மழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. எச்சரிக்கை இருக்கும் பட்சத்தில் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்கப்படும்’’ என்றார்.

Related Stories: