போலீஸ் ஸ்டேசனில் இருந்து தப்பிய திருடன் சிக்கினான்

சென்னை:  சென்னை பாண்டிபஜார் போலீசார் ஜிஎன் செட்டி சாலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், டி.பி.சத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் (26) என்றும், இவர் மீது தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் காவல் நிலையங்களில் செல்போன் மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மணிகண்டனை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர் விசாரணை நடத்தினர். அப்போது, மணிகண்டனை கைவிலங்கு போட்ட நிலையில் காவல் நிலையத்தில் அமரவைத்திருந்தனர். அங்கு உதவி ஆய்வாளர் ஞானசேகரன் பாதுகாப்பில் மணிகண்டன் இருந்தார்.

போலீசார் மணிகண்டனுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளனர். உணவை சாப்பிட்ட மணிகண்டன் கைகழுவி விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியே வந்த அவர், திடீரென கைவிலங்குடன் ஓட்டம் பிடித்தார். பின்னர் தப்பிய வழிப்பறி கொள்ளையன் மணிகண்டனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், மணிகண்டன் அவரது வீட்டின் அருகே நேற்று இரவு வரும் போது  டி.பி.சத்திரம் போலீசார் மறைந்து இருந்து சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் மணிகண்டனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கைவிலங்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மணிகண்டன் கைவிலங்கை தனக்கு தெரிந்த நண்பர் உதவியுடன் உடைத்து அதை கூவம் ஆற்றில் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மணிகண்டனை அழைத்து சென்று கைவிலங்கை தேடி வருகின்றனர். மேலும், நண்பரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: