அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 50 லட்சம் மோசடி: வாலிபர் கைது

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி 50 லட்சம் சுருட்டியவரை போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம், ஏ.வி.எம். அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சரன் பார்த்திபன் (29). இவர், பொதுப்பணித்துறை, மின்சார துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுந்தரேச பாண்டியன், ஹரிகரன், லட்சுமி காந்தன் ஆகிய மூன்று பேரிடம் சுமார் ₹50 லட்சம் வரை பணம் பெற்று, வேலை வாங்கித்தரவில்லை. இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து சரன்பார்த்திபனை பிடித்து விசாரித்தனர். அதில், சரன்பார்த்திபன் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பதற்காக அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் கூறி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

* சென்னை செம்மஞ்சேரி போலீசார் நேற்று முன்தினம் இரவு சுனாமி குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, 5 பேர் கும்பல் போலீஸ் வாகனங்கள் மீதும், காவலர்கள் ராஜேந்திரன், பாலமுருகன் ஆகியோர் மீதும், பாட்டில் மற்றும் கத்தியை வீசினர். இதில் முன்பக்கம் கண்ணாடிகள் நொறுங்கியது. புகாரின்பேரில், அரிசங்கர் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் சுரேஷ், சேட்டு உள்ளிட்ட 4 பேரையும், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

* மேற்கு மாம்பலம் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சுரேஷ் (58) என்பவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள், பீரோவில் இருந்த 1 லட்சம் பணம் மற்றும் விலை உயர்ந்த லேப்டாப்பை கொள்ளையடித்து தப்பினர். அதேபோல், அடுக்குமாடி குடியிருப்பின் பி பிளாக்கில் வசித்து வரும் சந்தனகுமார் (45) என்பவரது வீட்டிலும் மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். ஆனால், வீட்டிற்குள் பொருட்கள் எதுவும் மாயமாக வில்லை என்று சந்தனகுமார் தெரிவித்தார். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* செங்குன்றம் அடுத்த பி.டி.மூர்த்தி நகரில் தனியார் ஏடிஎம், எம்.ஜி.ஆர்.சிலை உள்ளது. அதேபோன்று ஆட்டந்தாங்கல் பெருமாள்கோயில் தெருவில் தெருமின் விளக்குகள் உள்ளன.  நேற்று முன்தினம் இரவு இங்கு 2 கார்கள் மற்றும் ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த முருகன் எனபவருக்கு சொந்தமான 2 லாரிகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இவற்றை நேற்று முன்தினம் இரவு அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட டில்லிநாதன்(26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த லெனின் (20) என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது சொந்த ஊருக்கு செல்வதற்காக தாம்பரம் ரயில் நிலைய தண்டவாளம் அருகில் நடந்து சென்றபோது, அவரை வழிமறித்த கத்திமுனையில் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ₹300 பறித்த 13 வயது மற்றும் 16 வயது சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

* அடையார், இந்திரா நகர், முதல் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (55). மாற்றுத்திறனாளி. கடந்த 14ம் தேதி விஸ்வநாதன் வீட்டின் அருகே நடந்து சென்றபோது தடுக்கி விழுந்தார். படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

* பெசன்ட் நகர் கடற்கரையில், கத்திமுனையில் வழிப்பறி செய்த சைதாப்பேட்டை ஆட்டுத்தொட்டி பகுதியை சேர்ந்த தேவராஜ் என்ற ஸ்டீபன் (23), சர என்ற சரவணன் (23) மற்றும் 2 சிறுவர்கள் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 சவரன் நகை, ஆட்டோ, செல்போன், பைக், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

* செங்குன்றம் எடைப்பாளையம் ஏரிக்கரையை சேர்ந்த பிரபல கொள்ளையன் ராகுல் (26), என்பவரை கொலை செய்த எடைப்பாளையம் கிருஷ்ணா நகர் 4வது தெருவை சேர்ந்த மாதவன் (28), அதே பகுதியை சேர்ந்த பிரசன்னா (27), பாடியநல்லூர் மூர்த்தி நகரை சேர்ந்த அப்பு (எ) சாயின்ஷா (24) ஆகிய மூவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

* கிண்டியில் இருந்து நங்கநல்லூர் நோக்கி மினி பஸ் வேளச்சேரி வழியாக நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. ஆலந்தூரை சேர்ந்த முருகன் (38) என்பவர் நடத்துனராக பணிபுரிந்தார். வேளச்சேரி வந்தபோது, குடிபோதையில் இருந்த 2 பேர் பேருந்தில் ஏறியுள்ளனர். பின்னர், பேருந்தில் பயணிகளுக்கு இடையூறு செய்து கொண்டு இருந்தனர். இதனால், முருகன் அவர்களை தட்டிக்கேட்டு உள்ளார். அவரை மதுபாட்டிலால் தாக்கிய பள்ளிக்கரணை மயிலை பாலாஜிநகரை சேர்ந்த கார்த்திக் (26), ராஜேந்திரன் (19) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: