நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதற்கு இழப்பீடு வழங்காமல் மெட்ரோ ரயில் பணிக்காக கடை, வீடுகள் இடிப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் பணிக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் 15க்கும் மேற்பட்ட கடை மற்றும் வீடுகளை அதிகாரிகள் இடித்து தள்ளினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் பாதை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரம் உள்ள தனியார் கடைகள் மற்றும் வீடுகள் ஆர்ஜிதம் செய்யப்பட்டு அவர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளது. ஆனால், தேரடி பகுதியில் உள்ள சிலருக்கு இன்னும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.

இதனால் இழப்பீட்டுத் தொகை வழங்காமல் தங்களுடைய கடைகள் மற்றும் வீடுகளை ஆர்ஜிதம் செய்யக்கூடாது என்றும், முறையான முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தேரடி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளை  பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிக்க நேற்று மாலை வருவாய்த்துறை அதிகாரிகள்  அப்பகுதிக்கு வந்தனர். இதைப்பார்த்த திருவெற்றியூர் பொது வர்த்தகர் சங்க தலைவர் ராமசாமி தலைமையில், 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும்  வீட்டு உரிமையாளர்கள் இழப்பீட்டு தொகை வழங்காமல் கடைகளை இடிக்கக் கூடாது என்று கூறி வருவாய்த் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு  கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருவொற்றியூர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். தங்களுக்கு இரண்டு நாள் அவகாசம் கொடுத்தால் தாங்களே இடித்து அப்புறப்படுத்திக் கொள்கிறோம் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் வருவாய்த் துறையினர் அவர்களின் கோரிக்கையை நிராகரித்ததை தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட கடைகளையும், வீடுகளையும் இடித்து தள்ளப்பட்டது. இதனால் கடைகளையும், வீடுகளையும் இழந்த வியாபாரிகள் மற்றும் மக்கள் அழுது புலம்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: