நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பள்ளி மைதானத்தை கையகப்படுத்த ஐகோர்ட் தடை

சென்னை: மெட்ரோ ரயில் நிலையத்துக்காக நூற்றாண்டு பழமையான பள்ளியின் விளையாட்டு மைதானத்தை ஆர்ஜிதம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிட கூடாது என எழும்பூர் வருவாய் கோட்டாட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக  மாதவரம் முதல் சிறுசேரி வரையிலான 45.81 கிலோ மீட்டர் வழித்தடம் அமைக்க  திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், நில ஆர்ஜித பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு அருகே  ரயில் நிலையம் அமைக்க  குட் ஷெப்பர்ட் பள்ளி விளையாட்டு மைதானத்தை கையகப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென்று பள்ளி நிர்வாகத்துக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரியும்,  மைதானத்தை ஆர்ஜிதம் செய்ய தடைவிதிக்க கோரியும் குட் ஷெப்பர்ட் பள்ளி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு  நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேவியர் அருள்ராஜ் வாதிடும்போது, பள்ளியின் மைதானத்தில் நான்கில் 3 பகுதியை ஆர்ஜிதம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் உன்னதமான நோக்கத்தில் இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பள்ளி சிறந்து விளங்குகிறது.

பள்ளிக்கு அருகில் வேறு மாற்று இடத்தை ஆர்ஜிதம் செய்யாமல் பள்ளியின் விளையாட்டு மைதானத்தை ஆர்ஜிதம் செய்தால், மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்,  ரயில் நிலையம் அமைத்தால் பொதுமக்கள் வந்துசெல்லும்போது, மாணவர்கள் கல்வி கற்பதற்கான அமைதியான சூழலும் பறிபோய்விடும். நூற்றாண்டு பழமையான இந்த பள்ளியின் நன் மதிப்புக்கும் சிக்கல் ஏற்பட்டு விடும். மாணவர்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘மைதானத்தை ஆர்ஜிதம் செய்ய  ஆட்சேபம் தெரிவித்துள்ள பள்ளி நிர்வாகத்தினரை எழும்பூர் வருவாய் கோட்டாட்சியர்  அக்டோபர் 1ம் தேதி அழைத்து  அவர்களின் கருத்தை கேட்க வேண்டும். பள்ளி மைதானத்தை ஆர்ஜிதம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடக் கூடாது. இந்த மனுவுக்கு 4 வாரங்களுக்குள் நில ஆர்ஜிதம் செய்யும் அதிகாரி (எழும்பூர் வருவாய் கோட்டாட்சியர்), தமிழக அரசு, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories: