கூவத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்

திருக்கழுக்குன்றம், செப்.19: கூவத்தூர் ஊராட்சி கிழக்கு கடற்கரை சாலையில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லத்தூர் ஒன்றியம் கூவத்தூர் ஊராட்சியில் புதுக்காலனி, பழைய காலனி, பெரும்பள்ளம், கொல்லமேடு, நாவக்கால், மலையூர், கீழார் கொல்லை உள்பட பல பகுதிகள் உள்ளன. இங்கு 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

கடந்த 3 மாதங்களாக மேற்கண்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால், பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்து பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வந்தனர். குடிநீர் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என லத்தூர் ஒன்றிய அலுவலகத்தில், பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், தண்ணீர் கிடைக்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் கூவத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று காலை திரண்டனர்.  அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பு நிலவியது. தகவலறிந்து மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்புராஜ், லத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, உடனடியாக சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். குடிநீருக்காக பொதுமக்களின் திடீர் போராட்டத்தால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: