பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படும் சர்வதீர்த்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம், செப்.19: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான சர்வதீர்த்தக்குளம் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ளதால் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து கலெக்டர் பொன்னையாவிடம், பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான சர்வதீர்த்தக் குளம் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளில் தீர்த்தவாரி நடைபெறும்.

இந்தக் குளத்தைச் சுற்றி கங்காதீஸ்வரர், அனுமந்தீஸ்வரர், யோகலிங்கேஸ்வரர், ராமேஸ்வரர், சீத்தேஸ்வரர், லட்சுமனேஸ்வரர், மல்லிகார்ஜூனேஸ்வரர், தீர்த்தீஸ்வரர், இரணீஸ் வரர், காமேஸ்வரர், காசிவிஸ்வநாதர், தவளேஸ்வரர் என மொத்தம் 12 சிவன் சன்னதிகள் உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ₹43.90 லட்சம் செலவில் குளத்தில் உள்ள படிக்கட்டுகளை மூடி சிறிய பூங்காக்கள் அமைக்கப்பட்டது. மேலும் 10 அடி அகலத்துக்கு சிமென்ட் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படாததால் மரம், செடி,கொடிகள் முளைத்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் விஷப் பூச்சிகள் அதிகளவில் உருவாகி உள்ளன.

மேலும் தரமற்ற முறையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதால் திதி கொடுக்க வருபவர்கள் குளத்தில் தவறிவிழும் அபாயம் உள்ளது. பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் குளத்தில் வாழும் உயிரினங்கள் அவற்றை உண்டு உயிரிழக்கின்றன. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்தக் குளத்தை சுற்றியுள்ள 12 சிவன் சன்னதிகளிலும் விளக்கேற்றி முறையான பூஜைகள் மற்றும் நைவேத்தியங்கள் செய்யவும், சுகாதார சீர்கேடாக உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றவும், இடிந்துள்ள படிக்கட்டுகள் சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: