அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ₹50 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை, செப்.19: சென்னை விருகம்பாக்கம், ஏவிஎம் அவென்யூவை சேர்ந்தவர் சரண் பார்த்திபன்(29). வளசரவாக்கத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார். மேலும், சென்னை தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை, மின்சார துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுந்தரேச பாண்டியன், ஹரிகரன், லட்சுமி காந்தன் ஆகியோரிடம் சுமார் ₹50 லட்சம் வரை பெற்றுள்ளார்.  ஆனால், அரசு வேலையும் வாங்கித்தரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், தி.நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வளசரவாக்கம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரண் பார்த்திபனை பிடித்து விசாரித்தனர். அதில, சரண் பார்த்திபன் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.  அவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே, அடிக்கடி அவர்களை தலைமை செயலகத்திற்கு அழைத்து சென்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியாளர்களிடம் தன்னை நன்கு அறிமுகமானவர் போல் பேசி பாவலா காட்டியுள்ளார். இதனால், அவர் மீது அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது.

அனைவரும், தங்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அவரிடம் பணத்தை கொடுத்துள்ளனர். அதன்பிறகே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இதையடுத்து அவர்கள் போலீசில் புகார்அளித்ததால், சரண் பார்த்திபன் சிக்கினார் என தெரியவந்ததாக போலீசார் கூறினர். தொடர்ந்து போலீசார், சரண் பார்த்திபனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் இதேபோல் பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இது சம்பந்தமாக மேலும் பல புகார்கள் வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: