எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக பார்வதிபுரம் பகுதியில் சாலைகள் தற்காலிக சீரமைப்பு அக்டோபர் 31ம் தேதிக்குள் பால பணிகள் முடிவடையும்

நாகர்கோவில், செப்.19: நாகர்கோவிலில் வருகிற 22ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். குமரி மாவட்டம்  முழுவதும் இருந்து அதிமுகவினர் இதில் கலந்து கொள்வார்கள் என்பதால், அவர்கள் வந்து செல்ல வசதியாக நாகர்கோவில் நகரில் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது நாகர்கோவில் நகரில் பார்வதிபுரம் மேம்பால பணி நடக்கிறது. இதனால் திருவனந்தபுரம் மற்றும் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் இருந்து வர வேண்டிய பஸ்கள், கார்கள், வேன்கள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் இறச்சக்குளம், கணியான்குளம் வழியாக புத்தேரி வந்து பின்னர் பாலமோர் ரோடு வழியாக நாகர்கோவில் நகருக்குள் வருகின்றன.இந்த நிலையில் 22ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு வரும் வாகனங்களும் இந்த வழியாக வந்தால் கடுமையான நெருக்கடி ஏற்படும் என்பதால், பார்வதிபுரம் பாலம் வழியாக வாகனங்கள் வரும் வகையில் தற்காலிகமாக இந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என்று அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று, கடந்த வாரம் மேம்பால பணியை பார்வையிட்ட மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அதிகாரிகளிடம் இது தொடர்பாக பேசி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து தற்போது பார்வதிபுரம் பகுதியில் பாலம் அமைக்கும் பகுதியில் ரோடுகளை சமன்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் இன்னும் 2, 3 நாட்களில் முடிவடையும் என தெரிகிறது. பின்னர் மேற்கு மாவட்டததில் இருந்து வரக்கூடிய கார், வேன்கள் இரு நாட்களுக்கு இந்த வழியாக அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மழை வராமல் இருந்தால் தான் இந்த பாதையை பயன்படுத்த முடியும். மழை பெய்தால் பாதையை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் கூறுகையில், பார்வதிபுரம் மேம்பால பணிகள் வேகமாக நடக்கின்றன.  ஆகஸ்ட் இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இடையில் மழை வந்ததால் பணிகள் நடக்க வில்லை. தற்போது வேகமாக நடைபெற்று வரும் பணிகளால் அக்டோபர் 31ம் தேதிக்குள் பாலப்பணி முடிவடையும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

Related Stories: