மண்டைக்காடு கோயிலில் நீதிபதி அதிரடி ஆய்வு பிரசாத ஸ்டாலில் இருந்த பேக்கரி பொருட்களை அகற்ற உத்தரவு

குளச்சல், செப்.19:  தமிழகம் முழுவதும் இந்துசமய அறநிலையத் துறைக்குட்பட்ட கோயில்களில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளனவா? என்பதை மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்ய உயர்நீதி மன்ற உத்தரவிட்டுள்ளது. அதன்படி அந்தந்த மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நேற்று மாலை குமரி மாவட்ட முதன்மை நீதிபதி கருப்பையா மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் திடீர் ஆய்வு நடத்தினார். கோயில் வளாகத்திற்குள் சென்ற நீதிபதி வாசலில் இருந்த பூக்கடையில் பூ வாங்கினார். பின்னர் அர்ச்சனை சீட்டு வாங்கி கோயிலுக்குள் சென்று வழிபட்டார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூக்கடைகள், பிரசாதம் ஸ்டால் மற்றும் கோயில் சுற்றுப்பிரகாரம், பொங்கலிடும் பகுதி, குடிநீர் வசதி ஆகிய இடங்கள் சுத்தமாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். மற்றும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அறை, தரிசனம் செய்வதற்கு முதியோர்களுக்கு முன்னுரிமை போன்றவை குறித்தும் பக்தர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது தலைமை குற்றவியல் நீதிபதி பாண்டியராஜ் மற்றும் சட்டபணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுகள் குறித்து மாவட்ட நீதிபதி கருப்பையா குறிப்பு எடுத்துக் கொண்டார்.

தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்ட மாவட்ட நீதிபதி கருப்பையா இலவச கழிப்பிடத்தில் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து அறிய உதவியாளரை கழிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தார். கழிப்பிட கட்டிடத்தில் இருந்த நபர் பணம் வசூலித்ததாக உதவியாளர் நீதிபதியிடம் கூறினார். அர்ச்சனை செய்வதற்கு திருக்கோயில் நிர்வாகம் ரூ.5 மற்றும் ரூ. 20 கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதில் ரூ. 20 கட்டணம் செலுத்துவோருக்கு குங்குமம் மற்றும் நூல் கொடுப்பது வழக்கம். இது சமீபகாலமாக கொடுக்கப்படுவது இல்லை. நேற்று நீதிபதியிடம் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் குங்குமம், நூல் கொடுக்கப்படவில்லை. இந்த முரண்பாடு குறித்து பக்தர்கள் நீதிபதியிடம் ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளனர். அர்ச்சனை முடிந்த பின்னர் சீட்டு விற்பனை செய்யும் ஊழியரிடம், ரூ. 5க்கான அர்ச்சனை சீட்டு இருக்கிறதா என நீதிபதி கேட்டார். அவர் இருக்கிறது கேட்பவர்களுக்கு மட்டும் கொடுப்போம் என மழுப்பலாக பதில் கூறினார். நைவேத்திய பிரசாதம் தவிர ஸ்டாலில் இருந்த பேக்கரி பொருட்களை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து அந்த பொருட்கள் அகற்றப்பட்டது. ஆய்வின்போது திருக்கோயில் ஊழியர்களை தவிர அதிகாரிகள் யாரும் இல்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். சுமார் அரை மணி நேரம் இந்த ஆய்வு நடந்தது.

Related Stories: