ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்.சி. மருத்துவம் சார்ந்த படிப்புகள் தொடங்க அனுமதி இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை

நாகர்கோவில், செப்.19:  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்.சி. மருத்துவம் சார்ந்த படிப்புகள் தொடங்க அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு முதல் மொத்தம் 3 பிரிவுகளில் 60 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் டிப்ளமோ படிப்புகள் மட்டுமே உள்ளன. இங்கு பி.எஸ்.சி. மருத்துவம் சார்ந்த படிப்புகள் தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் இருந்து வந்தன. கடைசியாக மருத்துவக்கல்லூரி முதல்வராக (பொறுப்பு) டாக்டர் ராதாகிருஷ்ணன் இருந்த சமயத்தில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்த கடிதங்களின் அடிப்படையில் ஆய்வு குழுவினர் மருத்துவக்கல்லூரிக்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பி.எஸ்.சி. மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

பி.எஸ்.சி. மெடிக்கல் லேப் டெக்னாலஜி, பி.எஸ்.சி. டயாலிசிஸ் டெக்னாலஜி மற்றும் பி.எஸ்.சி. ரேடியாலஜி மற்றும் இமேஜிங்  டெக்னாலஜி ஆகிய படிப்புகள் தொடங்க அனுமதி கிடைத்துள்ளது. இந்த ஆண்டு முதல் இந்த படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. ஒவ்வொரு படிப்பிலும் தலா 20 மாணவ, மாணவிகள் வீதம் மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  இது 3 வருட படிப்பு ஆகும். இந்த வருடத்தில் இருந்தே மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டயாலிசிஸ் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் தற்போது பி.எஸ்.சி. மருத்துவம் சார்ந்த படிப்புகள் தொடங்க அனுமதி கிடைத்து இருப்பது, மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர்.

Related Stories: