சுங்குவார்சத்திரம் அருகே சோகண்டி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்தது

பெரும்புதூர், செப்.19: சுங்குவார் சத்திரம் அருகே, பலத்த சூறைக்காற்றுடன் வீசிய மழையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வேேராடு சாய்ந்தது. பெரும்புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதையொட்டி நேற்று வீசிய பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், சுங்குவார்சத்திரம் - திருவள்ளுர் பிரதான சாலை சோகண்டி கிராமத்தில் சாலையோரமாக இருந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. எப்போதும் வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் பழமையான மரம் விழும்போது அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் செல்லவில்லை. இதனால், விபத்து தவிர்க்கப்பட்டது.

தகவலறிந்து பெரும்புதூர் வட்டார வளார்ச்சி அலுவலர் சீனிவாசன், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். மேலும் சாலையின் ஒரு பகுதியில் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை சீரமைக்கப்பட்டது.

மேலும் இப்பகுதியில் பல மரங்கள் கிளைகள் இல்லாமல், மரத்தின் கீழ்பகுதி மட்டும் எந்தவித பிடிப்புமின்றி காய்ந்து நிற்கிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், காற்றின் வேகம் அதிகமாக உள்ளது.

இதனால் காய்ந்த மரங்கள் விழும் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து சென்று வருகின்றனர். அவ்வப்போது மழை பெய்து வருவதால் பச்சை மரங்கள் கூட வேரோடு சாய்ந்து விழுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அசம்பாவிதம் நடக்கும் முன் உரிய நடவடிக்கை எடுத்து காய்ந்த மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: