விரிசல் ஏற்பட்ட பொய்கை அணையில் அதிகாரிகள் ஆய்வு

ஆரல்வாய்மொழி, செப்.19: ஆரல்வாய்மொழி பொய்கை அணையின் மறுகால் பகுதியில் விரிசல் விழுந்ததால் தண்ணீர் கசிந்து வெளியேறி வருகிறது. இதனை அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆரல்வாய்மொழி - நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் செண்பகராமன்புதூர் மரப்பாலம்  பகுதியில் வடக்கு மலை அடிவாரத்தில் பொய்கை அணை உள்ளது. இந்த  அணை 2.10.2000 அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணையின் கொள்ளளவு 42.62 அடி. அணையின் நீளம் 1202 மீட்டர் ஆகும். இதில் இரண்டு மதகுகள் உள்ளன.அணையின் மூலம் 1357 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் பயன் பெறுவதாக கூறப்படுகிறது.அணையின் மறுகால் ஓடை அணையின் இடது பக்க ஓரமாக உள்ளது. இது பாறைகற்கள் அடுக்கப்பட்டு சுமார் ஐந்து அடுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் பெய்த மழையில் அணை நீர்மட்டம் 29 அடியினை தொட்டது. அணை கட்டியதில் இருந்து 29 அடி அளவு தண்ணீர் வந்தது இதுவே முதல் முறை என்பதால் தண்ணீர் மறுகால் ஓடை வரை நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் அணையில் உள்ள தண்ணீர் மறுகால் தடுப்பு சுவருக்கு அடியில் கசிவு ஏற்பட்டு  வெளியேறி வருகிறது. அணையில் 29 அடி மட்டுமே தண்ணீர் பெருகியுள்ள இந்த நிலையிலேயே நீர்கசிவு அதிகரித்துள்ளது.

அணையின் மொத்த கொள்ளளவான 42. 62 அடி பெருகினால் மறுகால் உடைப்பு ஏற்பட்டு விடுமோ என பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.

 இது பற்றி நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று காலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள்சேகர் மற்றும் பழையாறு வடிநில உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் வசந்தி, நாகர்கோவில் உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் பொதுப்பணித் துறை ஊழியர்களும் அணையில் விரிசல் ஏற்பட்ட இடத்தினை ஆய்வு செய்தனர்.  இதில் மறு கால் தடுப்பு சுவரின் பக்கவாட்டு இடத்தில் இருந்து தண்ணீர் கசிவு ஏற்படுவதை கண்டுபிடித்தனர். பின்னர் தண்ணீர் கசிவினை அடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.

Related Stories: