தொப்பை குறைய அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஜிம் வசதி

திருவள்ளூர், செப். 19: அனைத்து போலீஸ் நிலையங்களிலும், உடலை கட்டுக்கோப்புடன் பராமரிக்கவும், உடற்பயிற்சி செய்யவும் அரசு உத்தரவுப்படி ஜிம் அமைக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி ஆகிய 5 போலீஸ் சப்- டிவிஷன்களுக்கு உட்பட்டு 29 போலீஸ் நிலையங்கள் உள்ளன. மேலும், நான்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களும் உள்ளன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றுகின்றனர். இவர்களில் சிலர், தொப்பை, சர்க்கரை வியாதி, சுவாசக்கோளாறு, ரத்தக்கொதிப்பு போன்றவற்றால் தவிக்கின்றனர். பணிச்சுமையால் மன அழுத்தம் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம், போலீசாருக்கு அவ்வப்போது உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. தியானம், யோகாசன பயிற்சிக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. எனினும், இப்பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படுவதில்லை. இருந்தாலும், அதிகாலையில் ஓட்டம், நடைபயிற்சி மேற்கொள்ளுதல், விளையாட்டு போன்றவற்றில் போலீசார் அக்கறை காட்டுகின்றனர். ஆனால், இம்மாவட்டத்தில் 5 போலீஸ் நிலையங்களில் மட்டுமே 17 வகையான உபகரணங்களுடன் ‘’ஜிம்’’ வசதி உள்ளது. மற்ற போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு உடற்பயிற்சி மேற்கொள்ள, நவீன உடற் பயிற்சி கூட (ஜிம்) வசதி இல்லை. எனவே, அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ‘ஜிம்’ அமைக்க வேண்டும் என போலீசார் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், போலீசாரின் வேலை பளு காரணமாக நேரத்திற்கு உணவு சாப்பிடுவது, உடற்பயிற்சி ஆகியவை குறைந்து விட்டது. இதனால், பலர் உடல் தகுதி இழந்து தொப்பையுடன் உள்ளனர். இதையடுத்து, போலீசார், ‘பிட்னஸ்’ஆக மாற ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் ஜிம் வசதியை ஏற்படுத்தி தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உடல் எடை குறைக்கவும்,  பிட்னஸ் மற்றும், புத்துணர்வுடன் இருக்கவும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஜிம்  அமைக்க மாவட்ட எஸ்.பி., பொன்னி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: