இந்து மகா சபா சார்பில் 250 விநாயகர் சிலைகள் சொத்தவிளையில் கரைப்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம்

நாகர்கோவில், செப்.19: நாகர்கோவிலில் நேற்று இந்து மகா சபா சார்பில், 250 விநாயகர் சிலைகள் சொத்தவிளை கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 13ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி, பா.ஜ., இந்து மகா சபா, சிவசேனா, தமிழ்நாடு சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன. இந்த சிலைகள் கடந்த 14ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. 14ம் தேதி சிவசேனா மற்றும் தமிழ்நாடு சிவசேனா சார்பில் சிலைகள் கரைக்கப்பட்டன. 15ம்தேதி மணவாளக்குறிச்சியில் மட்டும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. 16ம் தேதி (ஞாயிறு) இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் 10 இடங்களில் இருந்து ஊர்வலமாக சென்று, நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. நேற்று (18ம்தேதி) இந்து மகா சபா சார்பில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் இந்து மகா சார்பில் வைக்கப்பட்டு இருந்த சிலைகள் ஊர்வலமாக நாகர்கோவில் நாகராஜா திடலுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.

இந்த ஊர்வலத்துக்கு இந்து மகா சபா கோட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாநில மாணவரணி தலைவர்  டாக்டர் சுரேஷ்ராமன், மாநில விவசாய அணி அமைப்பாளர் நீலகண்ட பிள்ளை  முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் த. பாலசுப்பிரமணியன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் செந்தில், கொள்கை பரப்பு செயலாளர் காளிதாசன், மாநில செயலாளர் பொன். வெற்றிவேல், மாநில அமைப்பு செயலாளர் செந்தில்குமார், மாநில பொது செயலாளர் முத்தப்பா உள்பட மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து புறப்பட்டு அவ்வை சண்முகம் சாலை, ஒழுகினசேரி, வடசேரி, மணிமேடை, அண்ணா பஸ் நிலையம், கோட்டார், ஈத்தாமொழி விலக்கு சந்திப்பு, வடலிவிளை, வைத்தியநாதபுரம், இருளப்பபுரம், என்.ஜி.ஓ. காலனி, கோயில்விளை, மதுசூதனபுரம், தெங்கம்புதூர் வழியாக சொத்தவிளையை அடைந்தது.

அங்கு வாண வேடிக்கை மற்றும் பூஜைகள் நடந்தன. வில்லுக்குறி வக்கீல் கிரீனிவாச பிரசாத் அர்ப்பண நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து சிலைகள் சொத்தவிளை கடலில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பை தொடர்ந்து டி.எஸ்.பி. இளங்கோ மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  டெம்போ, லாரிகளில் என 250 சிலைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. பல்வேறு அலங்காரங்களுடன் இரண்டரை அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரையிலான சிலைகள் இருந்தன. சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டதால் நாகர்கோவிலில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கோட்டார் பகுதியில் ஊர்வலம் சென்று கொண்டு இருந்த போது ஆம்புலன்ஸ் வந்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் ஆம்புலன்சுக்கு வழி விட்டு அனுப்பி வைத்தனர்.

Related Stories: