காட்சி பொருளான மெட்டல் டிடெக்டர் வாசல்

திருவள்ளூர், செப். 19: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ளே நுழையவும், வெளியேறவும் பல வழிகள் உள்ளதால் அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், மெட்டல் டிடெக்டர் வாசலும் பழுதாகி இயங்கவில்லை. சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று திருவள்ளூர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் வழியாக தினம்தோறும், 10 எக்ஸ்பிரஸ் ரயில்களும், 160 புறநகர் ரயில்களும் நின்று செல்கின்றன. மாவட்டத்தின் தலைநகராக இருப்பதால், அரசு அலுவல் பணி, கல்வி, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, வெளியூர்களில் இருந்து திருவள்ளூருக்கும், இங்கிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு மக்கள் தினமும் ரயில் மூலம் சென்று வருகின்றனர். இதன்படி, தினமும் ஒரு லட்சம் பேர் திருவள்ளூர் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு முறைப்படி நுழைவு வாயிலில் உள்ள மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாக சென்று, நடைமேம்பாலம் வழியாக பயணிகள் அந்தந்த நடைமேடைகளுக்கு செல்ல வேண்டும். மாறாக, தண்டவாளத்தில் இறங்கி அனைத்து நடைமேடைகளுக்கும் பயணிகள் செல்வது வாடிக்கையாக உள்ளது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் திறந்தவெளி போல், திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு யார் வேண்டுமானாலும் உள்ளே வந்து விட்டு செல்லலாம் என்ற நிலை உள்ளது. ரயில் நிலையத்தில் சோதனை என்பது பெயரளவுக்குத்தான் உள்ளது. ரயில் நிலையத்தின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு மெட்டல் டிடெக்டர் வாசல்களும் இயங்குவதில்லை. இவ்வழியாக பயணிகள் சென்றால் ‘’பீப்’’.சத்தம் கேட்பதில்லை. இவ்வாறு மெட்டல் டிடெக்டர் வாசல் பயனின்றி உள்ளதால், திருவள்ளூர் ரயில் நிலையம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

இதுகுறித்து ரயில்வே அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘’மிகப்பெரிய ரயில் நிலையங்களில், ஒன்று அல்லது இரண்டு வாயில்கள் மட்டுமே இருக்கும். அப்போதுதான், டிக்கெட் பரிசோதனை, நெருக்கடி நேரங்களில், ‘’மெட்டல் டிடெக்டர்’’’’ பரிசோதனை உள்ளிட்டவை முழுமையாக நடத்த முடியும்.

ஆனால், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் எந்த பகுதியில் இருந்தும் நுழைய முடியும் என்ற சூழல் உள்ளது. இதனால், உள்ளே வரும் அனைத்து பயணிகளையும் கண்காணிப்பதும், பரிசோதிப்பதும் முடியாத விசயமாக மாறிவருகிறது’’’’ என்றார். எனவே, அனைத்து ரயில் பயணிகளும் நேரடியாக தண்டவாளத்தில் செல்வதை தடுத்து, முறைப்படி நுழைவு வாயிலில் உள்ள மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாக செல்லவும், பழுதடைந்த மெட்டல் டிடெக்டர் வாசலை சீரமைக்கவும் ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: