கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவது நிறுத்தம் சங்க பணியாளர்களிடம் அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்

திருவள்ளூர், செப். 19: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன், நகைக்கடன் வழங்குவதை நிறுத்தினர். இதனால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள், வங்கி பணியாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 4,480 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்டம் தோறும் மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 134 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், நகை அடமானம் மூலம் சாதாரண கடனுக்கு 11.15 சதவீதம், பயிர் கடனுக்கு 7 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. நகை பயிர் கடன் வழங்க சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்கு, அதுவும் அரசால் அறிவித்த குறிப்பிட்ட பயிர்களுக்கே கடன் வழங்கப்படுகின்றன. மேலும் உரங்களுக்கு தனியாக பணம் பிடிக்கப்படும். ஆனால் தேசிய வங்கிகளில் ஆண்டு முழுவதும் ஆவணமின்றி 4 சதவீத வட்டியில் நகை மீதான பயிர் கடன் வழங்கப்படுகிறது.

இதனால் பெரும்பாலானோர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை நாடுவதில்லை. இதனால், கடந்த 2 ஆண்டுகளில் நகை கடன் வழங்குவது 60 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் பல நலிவடைந்து வருகின்றன. இதையடுத்து, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க ஊழியர்கள், பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. இதையடுத்து, நேற்று முன்தினம் முதல், வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கும் பணியை ஊழியர்கள் புறக்கணித்தனர்.

இதனால், சம்பா பருவத்துக்கு விவசாயம் செய்யவும், உரங்கள் வாங்கவும் நகைகளுடன் கூட்டுறவு வங்கிக்கு சென்ற கிராமப்புற விவசாயிகள், கடன் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒருசில விவசாயிகள் வேறுவழியின்றி அடகு கடைகளில் கூடுதல் வட்டிக்கு நகைகளை வைத்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்தாண்டுகளில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்நிலையில், வங்கி பணியாளர்களின் கடன் வழங்கா போராட்டம் துவங்கியும், இதுகுறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.

இதனால், கிராமப்புற விவசாயிகள் சம்பா பருவத்தில் விவசாயம் செய்யமுடியாமல், குடும்பத்தையும் காப்பாற்றுவது எப்படி என தெரியாமல், தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலை மீண்டும் தமிழகத்தில் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: