நாகர்கோவிலில் பட்டப்பகலில் தண்ணீரில் மயக்க பொடி கலந்து பெண்ணிடம் நகைகள் கொள்ளை நூதன முறையில் பெண் கைவரிசை

நாகர்கோவில், செப்.19 :  நாகர்கோவிலில் பெண்ணுடன் நட்பாக பேசி, தண்ணீரில் மயக்க பொடி கலந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். நாகர்கோவில் கோட்டார் பட்டகசாலியன்விளை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி வசந்தி (52). இவர் குமரி எஸ்.பி அலுவலகத்தில் அலுவலக பணியாளராக உள்ளார்.இவரது உறவினர் வீடு வடிவீஸ்வரத்தில் உள்ளது. நேற்று முன் தினம் மாலையில் வசந்தி, வடிவீஸ்வரம் செல்வதற்காக அண்ணா பஸ் நிலையம் அருகே பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால்  30 வயது மதிக்கத்தக்க பெண் வந்தார். அவர் வசந்தியிடம் பேசிக்கொண்டே, நானும் வடிவீஸ்வரம் தான் செல்கிறேன் என கூறி உடன் சென்றார். இடையில் வசந்தி ஒரு ஏ.டி.எம் சென்டரில் பணம் எடுத்தார். அப்போதும் அந்த பெண் வெளியே காத்திருந்தார். பின்னர் பணம் எடுத்துக்கொண்டு இருவரும் நடந்தனர்.

வடிவீஸ்வரம் மாடசுவாமி கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது அந்த பெண், வசந்தியிடம் குடிக்க தண்ணீர் வைத்துள்ளீர்களா என கேட்டுள்ளார். வசந்தியும் தான் பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரை குடிப்பதற்கு கொடுத்தார். தண்ணீர் குடித்தவாறு கோயில் அருகே அமர்ந்த அந்த பெண், பின்னர் தண்ணீர் பாட்டிலை வசந்தியிடம் கொடுத்து, நீங்களும் தண்ணீர் குடித்து கொள்ளுங்கள் என்றார். வசந்தியும், நாம் கொண்டு வந்த தண்ணீர் தானே என்று நினைத்து தண்ணீர் குடித்தார். தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் வசந்தி அப்படியே கோயில் அருகே மயங்கினார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்த போது அவர் அணிந்திருந்த சுமார் 3 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தன. உடனடியாக வசந்தி கூச்சலிட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து வசந்தியை கோட்டார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.  கோட்டார் போலீசில் இது குறித்து வசந்தி புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வசந்தியிடம் தண்ணீர் வாங்கி குடிக்கும் போது வசந்திக்கே தெரியாமல் அந்த பெண் தண்ணீரில் மயக்க பொடி கலந்து கொடுத்து தங்க நகைகளை அபேஸ் செய்து சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த பெண் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட பெண் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்தே வசந்தியுடன் சென்று இருப்பதால், எப்படியும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பார். மேலும் வசந்தி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கும் போதும் அந்த பெண் வெளியே தான் நின்று கொண்டு இருந்துள்ளார். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. எனவே அந்த கேமரா காட்சிகள் மூலம் அந்த பெண்ணை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடந்த மாதமும் இதே பாணியில் ஒரு பெண்ணிடம் நகை பறிப்பு நடந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்கள் பரபரப்பை உண்டாக்கி உள்ளன.

Related Stories: