கிணற்றுக்குள் விழுந்து 3 பேர் பலி: சடலங்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

சென்னை,  செப். 19: செய்யூர் அருகே ஊராட்சி கிணற்றில் தண்ணீர் எடுக்க முயன்றபோது சிலாப் உடைந்து 3 பேர் இறந்த சம்பவத்தில், சடலங்களை வாங்க மறுத்து உறவினர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைைய முற்றுகையிட்டனர். காஞ்சி மாவட்டம், செய்யூர் வட்டம், பவுஞ்சூர் அடுத்த சூரியபிள்ளையார் குப்பம் பகுதியில் கடந்த 16ம் தேதி பலத்த மழை பெய்தது. இதையொட்டி அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, குடிநீருக்காக அப்பகுதியை சேர்ந்த 7 பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர், அதே பகுதியில் உள்ள ஊராட்சி கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றனர். அங்கு, கிணற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் சிலாப் மீது ஏறி நின்று தண்ணீர் எடுத்தனர்.

அப்போது, திடீரென சிமென்ட் சிலாப் உடைந்ததால், 8 பேரும் கிணற்றில் விழுந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்கள் மீட்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதையடுத்து செய்யூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்பு படையினர் வந்தனர்.

அதற்குள் ஊர் பொதுமக்களே கயிறு உள்பட பல்வேறு உபகரணங்கள் மூலம் கிணற்றில் விழுந்த மல்லிகா (35), சிவகாமி (40), அம்சா (30), நீலாவதி (37), நாகப்பன் (40) ஆகியோரை உயிருடன் மீட்டனர். ஆனால், சசிகலா (30), மங்கை (50), கமலா (30) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதையடுத்து, மீட்கப்பட்ட 5 பேரையும் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையில், தீயணைப்பு மீட்பு படையினர், கிணற்றில் இருந்து 3 சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின்படி செய்யூர் போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து நேற்று காலை 3 சடலங்களும், உறவினர்களிடம் ஒப்படைக்க இருந்தது. காலை சுமார் 10 மணியளவில் மருத்துவமனை முன்பு திரண்ட உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், இறந்த மூவரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும், சடலங்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு, மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து செங்கல்பட்டு ஆர்டிஓ முத்துவடிவேல், தாசில்தார் பாக்கியலட்சுமி, டிஎஸ்பி கந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கலெக்டர் நேரில் வந்து உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது, மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமார் ஆகியோர் அங்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, ‘‘இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ₹5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காயமடைந்த 5 பேருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், தங்களது ஊராட்சிக்கு முறையான குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்,’’ என மனு அளித்தனர். அதை பெற்று கொண்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: