அம்மம்பாக்கம் - சீத்தஞ்சேரி சாலையில் வர்தா புயலில் சேதம் அடைந்த சோலார் விளக்குகளை சீரமைப்பதில் அலட்சியம்

ஊத்துக்கோட்டை, செப்.19: அம்மம்பாக்கம் முதல் சீத்தஞ்சேரி வரை வர்தா புயலில் சேதமடைந்த சோலார் விளக்குகளை சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். அந்த பகுதிகளில் இரவு நேரத்தில் சோலார் மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்துள்ள சாலையில் நடந்து செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் அம்மம்பாக்கம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சுற்றி ராமநாதபுரம், கூனிப்பாளையம், வெலமகண்டிகை, பென்னலூர்பேட்டை, வெள்ளாத்துக்கோட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் அம்மம்பாக்கம் வழியாக ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள சீத்தஞ்சேரி பஸ் நிறுத்தத்திற்கு சென்று வருகின்றனர்.

அவ்வாறு செல்பவர்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் போது நடந்தே வருகிறார்கள். இந்நிலையில், அம்மம்பாக்கம் - சீத்தஞ்சேரி பஸ் நிறுத்தம் வரை சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படும். இதை பயன்படுத்தி தனியாக நடந்து செல்பவர்களிடம் சமூக விரோதிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர். இதை தவிர்க்கவும், இரவு நேரங்களில் மக்கள் அச்சமின்றி சென்று வரவும் இந்த பகுதிகளில் மின் விளக்குகள் அமைத்து தர வேண்டும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் படி கடந்த 2015ல் ரூ.10 லட்சம் செலவில் அம்மம்பாக்கம் - சீத்தஞ்சேரி வரை சோலார் மூலம் இயக்கும் 15 மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.

விளக்குகளுக்கு சோலார் பேனல் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு மக்கள் நிம்மதி அடைந்தனர்.இதற்கிடையில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வர்தா புயலால் புதிதாக அமைக்கப்பட்ட சோலார் பேனல் கீழே விழுந்து சேதமடைந்தது.  ஒரு சில மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில் புயலால் விழுந்த சோலார் தகடுகள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள்  பழையபடி இருள் சூழ்ந்த சாலையிலேயே பயணம் செய்கின்றனர். எனவே புயலால் விழுந்த சோலார் பேனலை சீரமைத்து தெரு மின்விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கிராமங்களில் இருந்து வெளி ஊர் சென்று வேலை செய்துவிட்டு திரும்பும் மக்கள் பெரும்பாலானோர் பஸ் நிலையத்தில் இருந்து சீத்தஞ்சேரி - அம்மம்பாக்கம் சாலை வழியாக கிராமபுறங்களில் உள்ள வீடுகளுக்கு நடந்தே செல்கிறோம்.

இந்த பகுதியில் இருந்த மின்விளக்குகள் எரியாததால் எங்களுக்கு இரவில் செல்ல அச்சமாக உள்ளது. சாலை இருட்டாக இருப்பதால் குடிமகன்கள் இந்த பகுதியில் சாலை ஓரங்களிலேயே மது அருந்துகிறார்கள். இது குறித்து பூண்டி பிடிஓ அலுவலகத்தில் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவே சோலார் பேனலை சீரமைத்து தெரு விளக்குகள் எரிய புதிய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Related Stories: