விளையாட்டு உபகரணங்கள் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லாத அரசு பள்ளிகள்

திருவள்ளூர், செப். 19: அரசு மற்றும் நிதியுதவி பெரும் பள்ளிகளில் 70 சதவீதம் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில்  1068 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், 204 உயர்நிலை பள்ளிகள், 264 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட கல்வி துறையினர் ஆய்வு மேற்கொண்டதில், 70 சதவீதம் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாமல், பள்ளிகள் இயங்கி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்த ஆண்டுதோறும், வட்டார, மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஆனால், இங்குள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்காமல், பிற பாட ஆசிரியர்களை கொண்டு மாணவர்களை தயார்படுத்தி, போட்டிகளில் பங்கேற்க செய்யும் விதிமீறல் நடந்து வருகிறது. பல பள்ளிகளில் போதிய மைதானங்களும், உடற்கல்வி ஆசிரியர்களும் இல்லை. மேலும், மாணவர்கள் விளையாட தேவையான, அடிப்படை உபரணங்களான, ஸ்கிப்பிங் கயிறு, சதுரங்க பலகை, வாலிபால் உள்ளிட்டவை கூட இல்லை என்பது பல பெற்றோரின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால், மாவட்டத்தில் நடத்தப்படும் குறுவள விளையாட்டு போட்டிகளில், தனியார் பள்ளி மாணவர்கள் கோப்பைகளை தட்டிச் செல்கின்றனர்.

இந்த குறைபாடுகளுக்கு, ‘உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாமல், பிற ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுவது முக்கிய காரணம்’ என, விளையாட்டு ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது. எனவே, அனைத்து அரசு பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கவும், தேவையான விளையாட்டு உபகரணங்களை வைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: