இலவச பஸ் பாஸ் வழங்காததை கண்டித்து மன்னார்குடி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, செப்.18: கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படாததை கண்டித்து மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் தினமும் அரசு பஸ்களில் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ் கடந்த 3 மாத காலமாக வழங்கப்படவில்லை. இது குறித்து உரிய அதிகாரிகளுக்கு பலமுறை மாணவர்கள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

இந்நிலையில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படாததை கண்டித்தும், கழிவறை வசதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும்,  கல்லூரி மாணவர்கள் நேற்று தங்களின் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்களின் போராட்டம் காரணமாக  போலீசார் கல்லூரி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: