புலவர்நத்தம் கிராமத்தில் மின் மோட்டார் மூலம் சம்பா சாகுபடி பணி

வலங்கைமான், செப்.18: வலங்கைமான் அடுத்த புலவர்நத்தம் கிராமத்தில் வாய்க்கால்களில் போதிய தண்ணீர் வராத நிலையில் மின்மோட்டார் மூலம் சம்பா நடவு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது.

 கடந்த 6 ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை குறைவின் காரணமாகவும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து தமிழக அரசு முறையாக கேட்டு பெறாததாலும் ஆண்டுதோறும் ஜூன் மாதங்களில் திறக்கப்பட்ட மேட்டூர் அணை கால தாமதமாக திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை பாசனத்திற்கு உரிய நேரத்தில் திறக்காததால் 3 போக சாகுபடி முடிவுக்கு வந்து. ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே மிகுந்த போராட்டங்களுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தென்மேற்கு பருவமழையால் மேட்டூர் அணை தனது முழுகொள்ளவை எட்டியது. அதனையடுத்து கடந்த மாதம் 19ம் தேதி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு மாதத்தை கடந்த நிலையில் ஆறுகளில் செல்லும் தண்ணீர் முறையாக தூர்வாரததால் வாய்க்கால்களில் இதுவரை வரவில்லை. பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் இதுவரை வராததால் சம்பா சாகுபடி பணிகள் முழுமையாக துவங்கவில்லை.  வலங்கைமான் அடுத்த புலவர்நத்தம் கிராமம் வெண்ணாறு பிரிவு புலவனாறு மூலம் பாசனவசதி பெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக டெல்டா மாவட்டத்தின் அனைத்து பகுதிகளை போன்று இப்பகுதியிலும் வாய்க்கால்கள் தூர்வாரவில்லை.

இந்நிலையில் மன்னார்குடி பகுதியை சேர்ந்த முன்னோடி விவசாயிக்கு புலவர்நத்தம் பகுதியில் சுமார் 30 ஏக்கர் நிலம் உள்ளது. அவர் மின்மோட்டார் மூலம் கடந்த ஆடி மாதம் 18ம் தேதி சி.ஆர் 1009 என்ற ரக நெல்லினை விதைத்திருந்தார். இதுவரை வாய்க்கால்களில் போதிய தண்ணீர் வராத நிலையில் மின்மோட்டார் மூலமே தண்ணீர் பாய்ச்சி உழவு செய்தார். இதனையடுத்து  நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பணியாளர்களை கொண்டு நாற்று பறித்து நடவு செய்தார். இதன் மூலம் தற்போது சம்பா சாகுபடி பணியை மின் மோட்டார்கள் வைத்திருப்பவர்களே தொடரும் சூழ்நிலையே உள்ளது.

Related Stories: