நாட்டுப்படகில் மீன்பிடி தொழிலில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும்

சேதுபாவாசத்திரம், செப். 18: புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி நாட்டுப்படகில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மீன்வளத்துறை இயக்குனருக்கு விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் புகார் மனு அனுப்பினார். அதில் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு இடையே 1979ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதியும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1994ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி திங்கள், புதன், சனிக்கிழமைகளில் விசைப்படகு மீனவர்களும் மற்ற நாட்களில் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்ய வேண்டும். விசைப்படகுக்கு மீன்வளத்துறை அனுமதி டோக்கன் வழங்குவதுபோல் நாட்டுப்படகுக்கு டோக்கன் வழங்குவது கிடையாது. இதை சாதகமாக நாட்டுப்படகு மீனவர்கள் பயன்படுத்தி கொண்டு வாரத்தில் 7 நாட்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் போட்டு வைக்கும் வலைகள் விசைப்படகின் புரொபள்ளரில் (விசிறியில்) சிக்கி படகுக்கு சேதத்தை விளைவிக்கிறது. அன்றைய மீன்பிடி தொழில் மட்டுமின்றி படகு சரி செய்யும் வரை பல நாட்கள் தொழில் பாதிக்கப்படுகிறது. அத்துடன் வலைகளும் சேதமடைவதால் மீனவர்களிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை அடிக்கடி ஏற்படுகிறது. எனவே வாரத்தில் 7 நாட்களும் மீன்பிடி தொழில் செய்யும் நாட்டுப்படகு மீனவர்களை கட்டுப்படுத்தி புரிந்துணர்வு ஒப்பந்தப்படி மீன்பிடி தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்பாட்டை மீறி செயல்படும் நாட்டுப்படகுகள் மீது கடலுக்கு செல்ல தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: