40 ஆண்டுகளுக்கு பின் உள்ளூர் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி துவக்கம்

கும்பகோணம், செப். 18:  கும்பகோணத்தில் உள்ள உள்ளூர் பாசன வாய்க்கால் 40 ஆண்டுகளுக்கு பிறகு பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தூர்வாரும் பணி துவங்கியது. கும்பகோணம் காவிரி ஆற்றி–்ல் இருந்து பாலக்கரை பகுதியில் உள்ளூர் வாய்க்காலும், தேப்பெருமாநல்லூர் வாய்க்காலும் பிரிந்து செல்கிறது. இந்த 2 வாய்க்காலும் கும்பகோணம் நகரின் மைய பகுதியில் உள்ளதால் பாணாதுறைகுளம், ஆயிகுளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களுக்கு தண்ணீர் சென்று அதன்பிறகு பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒரே இடத்தில் பிரிவதால் இதை இரட்டை வாய்க்கால் என்று அழைப்பர். இந்நிலையில் உள்ளூர், தேப்பெருமாநல்லூர் பகுதியில் வயல்களில் குடியிருப்பு பகுதி அதிகமாக வந்தது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக வாய்க்காலில் முறையாக தண்ணீர் வராததால் மண் மற்றும் குப்பையால் தூர்ந்துவிட்டது. கும்பகோணம் நகரில் ஓடும் இந்த வாய்க்காலில் பல இடங்களில் வீடுகளின் கழிவுநீரும் கலந்தது. இதனால் வாய்க்காலிலும் குப்பைகள் அதிகமாகி சாக்கடை நீர் தேங்கியதால் கொசுக்கள் உற்பத்தியாகும் கூடாரமாக மாறியது.

இந்நிலையில் கும்பகோணம் பாணாதுறை குளத்துக்கு தண்ணீர் வர பிரதானமாக உள்ள உள்ளூர் வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்தவதற்காக சிட்டி யூனியன் வங்கி ரூ.10 லட்சம் நிதி வழங்கியது. இதையடுத்து பாலக்கரையில் இருந்து பிரியும் உள்ளூர் வாய்க்கால் தலைப்பு பகுதியிலிருந்து சாஸ்த்ரா கல்லூரி வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வாரும் பணி துவங்கி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. உள்ளுரூ வாய்க்கால் 40 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுகிறது.அப்போது வாய்க்காலின் இருபகுதியிலும் பக்கவாட்டு சுவர்கள் கட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: