பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தல் சாகுபடிக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

வேதாரண்யம்,செப்.18: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு கடைமடை பாசன பகுதியாகும். மேட்டூர் அணை நான்கு முறை நிரம்பிய நிலையில் கடைமடைக்கு கூடுதலாக தண்ணீர் வரும் என விவசாயிகள் நம்பி தலைஞாயிறு பகுதியில் பத்தாயிரம் ஏக்கரில் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். சாகுபடி செய்து பயிர்கள் முளைத்து 35 நாட்களான நிலையில் ஒரு முறை மட்டுமே அரிச்சந்திரா நதியில் தண்ணீர் வந்துள்ளது. தண்ணீர் வராத காரணத்தால் சுமார் ஐந்தாயிரம் ஏக்கரில் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சம்பா சாகுபடி நல்லநிலையில் இருக்கும் என்று நினைத்து விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கி தீவிர சாகுபடியில் ஈடுபட்டனர்.

பயிர்கள் நன்றாக முளைத்து தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயிகள் செய்தறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தலைஞாயிறு கடைத்தெருவில் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தலைஞாயிறு முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. சாலைமறியலில் தலைஞாயிறு திமுக பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் மகாகுமார், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பிரபாகரன் மற்றும் சந்திரகுமார், பால்முருகானந்தம், பாண்டியன், மணியன், கருணாகரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். தகவலறிந்த வேதாரண்யம் தாசில்தார் ஸ்ரீதர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சண்முகம், தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன். மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் இன்று (18ம் தேதி) முதல் தொடர்ந்து தண்ணீர் விடப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த சாலைமறியல் போராட்டத்தால் தலைஞாயிறு-வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.

Related Stories: