ஓராண்டாக மந்தமாக நடைபெற்றும் பாதியில் நிற்கும் வடிகால் பணி: கழிவுநீர் வீட்டிற்குள் புகும் அவலம்

கரூர், செப்.18: ஓராண்டாக வடிகால் பணி பாதியில் நிற்பதால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தும், கழிவுநீர் தேங்கியும் சுகாதாரகேடு ஏற்படுகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கரூர் நகராட்சி 39வது வார்டு பகுதியில் உள்ளது தில்லைநகர். முன்பு தாந்தோணி நகராட்சியில் இடம் பெற்றிருந்த பகுதி தற்போது கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. வடிகால் கட்டுமான பணி ஒரு ஆண்டுக்கு முன் துவங்கி பணிகளை பாதியிலேயே விட்டுவிட்டதால் சுகாதார கேட்டில் சிக்கி தவிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியது: கனகா: தில்லைநகர் பகுதியில் உள்ள தெருக்களுக்கு வடிகால் வசதியில்லை. அடுத்த தெருவில் பணியை ஆரம்பித்தவர்கள் இந்த தெருவில் பணியை தொடங்கவே இல்லை. இதனால் வீடுகளின் முன் குழிதோண்டி அதில் கழிவுநீரை விட்டுக்கொண்டிருக்கிறோம். இதனால் கொசுத்தொலை அதிகமாக இருக்கிறது. வடிகால் முழுமையாக கட்ட வேண்டும்.

ருத்ரன்:  இந்த தெருவில் உள்ள குடிநீர் குழாய்களில் திருகு இல்லை. 15நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தெருக்குழாய்களில் விநியோகம் செய்யப்படுகிறது. திருகு இல்லாமல் இருப்பதால் குடிநீர் வீணாகிறது. மேலும் குழாய் அமைத்த போது சிமென்ட் மேடை கட்டவில்லை. இதனால் சாலையில் நீர்வழிந்தோடி சுகாதாரகேடு ஏற்படுகிறது. மாரியாயி: ஒரு வருடத்திற்கு முன் வடிகால் வசதி கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சிமென்ட் சாலையும், வடிகாலும் கட்டப்பட்டது. இந்த பணியை ஒப்பந்தம் எடுத்தவர்கள் பாதியிலேயே நிறுத்திவிட்டனர். மழை பெய்தால் வடிகாலைவிட வீடுகள் பள்ளத்தில் இருப்பதால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்த விடுகிறது. ஒரு தெருவில் மட்டும் வடிகால் கட்டியுள்ளதால் இந்தநீர் போய் கலக்க இடமின்றி தேங்கி கிடக்கிறது. சுகாதார கேடு ஏற்படுகிறது. உடனே வடிகாலை முழுமையாக கட்டி கழிவுநீர் தேங்காமல் சென்று கலக்க வழிவகை செய்யவேண்டும்.

முத்துக்குமார்: வடிகாலில் கைக்குழந்தை விழுந்துவிட்டது. பலமுறை இதுகுறித்து கூறியும் நடவடிக்கை இல்லை. போராட்டம் நடத்திய பின்னர்தான் வந்து அடைப்பை நீக்கி விட்டனர்.

பாதியில் நிற்கும் வடிகால் வேலையை முடித்து சுகாதார கேட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தோம், ஒருமாதத்திற்கு முன் நகராட்சி ஆணையரையும் சந்தித்து முறையிட்டோம். ஆனால் இன்னும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை. உடனே வடிகால் கட்டி கழிவுநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றனர்.

Related Stories: